ஈகோவை விட்டுட்டு கட்சியை காப்பாத்துங்க...!- கனத்த இதயத்தோடு அதிமுகவை விட்டு வெளியேறிய செம்மலை பேட்டி...!
Leave your ego behind and save party Interview Semmalai who left AIADMK heavy heart
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை, செய்தியாளர்களை சந்தித்து உணர்ச்சிமிகுந்த கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் என்னை அரசியல் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளுக்கு உயர்த்தி மரியாதை அளித்தவர்கள். இயக்கம் உருவான ஆரம்ப காலத்திலிருந்தே எம்.ஜி.ஆருடன் இணைந்து பயணித்தேன். பின்னர் அம்மாவின் தலைமையிலும் நீண்ட காலம் பணியாற்றினேன்.

அந்த இயக்கத்திலிருந்து இன்று கனத்த மனதுடனும் வேதனையுடனும் விலகுவது எனக்கு மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்துகிறது.என்னை வளர்த்த அந்த இரு மகத்தான தலைவர்களின் நினைவுகளுக்கு முன் நான் தலைகுனிந்து வருத்தத்தை வெளிப்படுத்துகிறேன். அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய கடமை எனக்குள்ளது.
என்னுடைய இந்த விலகலுக்குப் பிறகாவது இயக்கத்தை பாதுகாத்து நிலைநிறுத்த வேண்டும் என்பதே என்னுடைய இறுதியான விருப்பமாகும்.தமிழக அரசியலில் இந்த இயக்கம் உறுதியான சக்தியாக தொடர வேண்டும். அது தமிழ்நாட்டின் அரசியல் சமநிலைக்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் அவசியமான ஒன்று.
என்னுடைய விலகலை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்களுக்குள் நிலவி வரும் அகந்தை மனப்பான்மையை கைவிட்டு, கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளை சீரமைத்து இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்த வேண்டும்.மக்கள் இயக்கமாக உருவான இந்த கழகம், மக்களிடமிருந்து மெதுவாக விலகிச் செல்கிறது என்ற அச்சம் பொதுமக்களிடையே உருவாகி வருவதை நான் உணர்கிறேன்.
இதை மூத்த நிர்வாகிகள் ஆழமாக சிந்தித்து இயக்கத்தை காப்பாற்ற முன்வர வேண்டும்.நம்மிடையே ஒற்றுமை இருந்தாலே போதும். வெளியில் இருந்து எந்த சதியும் வந்தாலும் அதை முறியடிக்கும் வலிமை இந்த இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உள்ளது. ஆனால் அந்த ஒற்றுமை தற்போது சிதைந்துகொண்டிருக்கிறது என்பதே வேதனை.
என்னுடைய கருத்துகளை யாரும் கேட்கவில்லை. இருந்தாலும் இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் பேசுகிறேன். மூத்த தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசித்து கழகத்தை பாதுகாக்க வேண்டும்.“போனது போகட்டும்; மீதமிருப்பதாவது காக்கப்படட்டும்” என்பதே என்னுடைய எண்ணம்.
ஒருவரை ஒருவர் நீக்குவது, ஒதுக்குவது போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து, அனைவரும் ஒன்றுபட்டு இயக்கத்தை முன்னேற்ற வேண்டும்.கட்சிக்கு தீங்கு விளைவிக்கும் மனப்பான்மை கொண்ட நபர்களை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. கட்சியை தனிப்பட்ட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயலும் போக்குகள் ஆபத்தானவை.
கட்சியின் நலனை விட தனிநபர் ஆதிக்கத்தை முன்னிறுத்தும் செயல்கள் இயக்கத்தை பலவீனப்படுத்தும். அதுபோன்ற சில முயற்சிகளை நாங்கள் எதிர்த்தோம்.அ.தி.மு.க.வை தவெக தலைவர் விஜய் அரசியல் சக்தியாக பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலை உருவாகியுள்ளது. அதற்கு காரணம், இயக்கத்தை வலிமையான அரசியல் சக்தியாக வெளிப்படுத்தத் தலைமை தவறியதே.
இதில் விஜயையோ அல்லது வேறு யாரையோ குறைசொல்ல முடியாது.அ.தி.மு.க. தலைவர்களிடையே நிலவி வரும் அகந்தை மோதல்களே கட்சியை பலவீனப்படுத்தி வருகின்றன. இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விட தனிப்பட்ட நிலைப்பாடுகளே மேலோங்குகின்றன. இதனால் கட்சியுடன் தொடர்ந்து பயணிக்க மனம் இடமளிக்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
English Summary
Leave your ego behind and save party Interview Semmalai who left AIADMK heavy heart