கரூர் பெருந்துயரம்: தனியாக ஒரு ஆய்வுக் குழுவை அமைத்த பாஜக மேலிடம்!
Karur Stampede BJP
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த விபத்துக்கான காரணங்களை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தனியாக ஒரு ஆய்வுக் குழுவையும் அறிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க எட்டு எம்பிக்கள் கொண்ட இந்தக் குழுவை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவுக்கு லோக்சபா எம்பி ஹேமமாலினி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா மற்றும் புத்த மகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
குழு விரைவில் கரூர் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்யும். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களை நேரில் சந்தித்து நிலைமையை மதிப்பீடு செய்து, சம்பவத்திற்கான காரணங்களையும் குறைபாடுகளையும் விளக்கும் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் என ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.