''தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரித்தால் திமுகவுக்குதான் விபரீதம்''; காங்கிரஸ் கார்த்தி சிதம்பரம் எச்சரிக்கை..!
Karti Chidambaram warns that if DMK supports the constituency redelineation bill it will be disastrous for DMK
ஜூலை 20-ஆம் தேதி மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டுவரவுள்ளதாக கூறப்படுகிறது.
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் பாஜக அழுத்தத்துக்கு திமுக இணங்கிப்போனால், நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை விட, திமுக மோசமான முடிவை சந்திக்கும் என்றும், பாஜக எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொண்டால் திமுகவுக்குதான் விபரீதம் தான் என சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் சார்பில் 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என்ற ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை கார்த்தி சிதம்பரம் எம்பி தொடங்கி வைத்த நிலையில், மாவட்டத் தலைவர் சஞ்சய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வினை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதாவது;

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால், இந்தி பேசும் மாநிலங்களை மையமாக வைத்தே அரசியல் நடக்கும் என்று குறிப்பிட்டதோடு, இந்த மசோதாவை ஆதரிக்க திமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒப்புக்கொண்டால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 05 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை என்றும், ஒரே நாடு; ஒரே தேர்தல் மூலம் 2029-ஆம் ஆண்டிலேயே சட்டப்பேரவை தேர்தலும் வந்துவிடும் என்று பாஜகவினர் ஆசை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு திமுக இணங்கிப்போனால், நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை விட, திமுக மோசமான முடிவை சந்திக்கும் என்றும், பாஜக எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொண்டால் திமுகவுக்கு தான் விபரீதம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் தவெக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், ஊழலை செயல்திறன், வெளிப்படைத் தன்மை மூலமாக தான் ஒழிக்க முடியும் என்றும், தவெகவுக்கு பெரும்பான்மை உள்ளது. கூட்டணி கட்சிகளும் வெளியேற வாய்ப்பில்லை. அதனால், புது கட்சிகளையோ, எம்எல்ஏக்களையோ சேர்க்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நவோதயா பள்ளி வந்தால் இந்தி கட்டாயமாக்கப்படும் என்ற அச்சம் உள்ளது என்றும், பள்ளி திறந்த பின்னர் தமிழ் கற்றுக் கொடுக்க எங்களுக்கு ஆசை தான். ஆனால், ஆசிரியர்கள் இல்லை என்று சொல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோன்று மாநில அரசு நடத்தும் பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கையை ஒப்புக்கொண்டால் தான் நிதி ஒதுக்குவோம் என்று சொல்வர்களோ என்ற அச்சம் உள்ளதாகவும் கார்த்தி எம்.பி. கூறியுள்ளார்.

அத்துடன், கூட்டணிக் கட்சியிலிருந்து யாராவது வந்தால் எங்கள் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று கடந்த முறை திமுக முடிவு எடுத்தது. அதுபோல தவெகவும் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஒரு மாவட்டத்தில் மாதத்துக்கு 2,000 பேரை நாய் கடிக்கிறது. அது ஆயிரமாக குறையுமா என்று தான் பார்க்க வேண்டும். அதைவிடுத்து 'தமிழ்நாடு நாள' கொண்டாடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தனியாக 'பேட்டிங்' செய்து எத்தனை நாள் தான் தோற்றுப் போவது. யாருடனாவது சேர்ந்து 'பேட்டிங்' செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை வந்துள்ளது. அதை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 06 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்று முன்னாள் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் கூறியது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ''அரசியல் சாசனத்திலும், சட்டத்திலும் கற்பனைக்கு தடை இல்லை; எல்லையும் இல்லை. கலர், கலராக கனவுகள் காணலாம்'' என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
English Summary
Karti Chidambaram warns that if DMK supports the constituency redelineation bill it will be disastrous for DMK