அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல.. அஞ்சி நடுங்க நாங்க அதிமுக கிடையாது.. பாஜக கூட்டணிக்கு சமாதி கட்டப்போவது உதயநிதி தான்.. ஆ.ராசா!
It seems like Amit Shah is scared We are not AIADMK It is Udhayanidhi who is going to build a tomb for the BJP alliance A Rasa
நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவதே ஸ்டாலினின் கனவு; அது ஒருபோதும் நடக்காது” என்று தெரிவித்தார்.
அமித்ஷாவின் இந்த பேச்சு தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த திமுக எம்.பி. ஆ.ராசா, தனது அறிக்கையில் அமித்ஷாவுக்கு நேரடியாக கடுமையான சாடலை பதிவு செய்துள்ளார்.
“நெல்லைக்கு வந்த அமித்ஷா, புதிதாக எதையும் பேசவில்லை. வழக்கம் போலவே அரைத்த மாவையே மீண்டும் அரைத்துள்ளார். திராவிட மாடல் அரசை விமர்சிக்க எதுவும் இல்லாததால், ஏற்கனவே கேட்டுக் கேட்டுப் புளித்த பொய்களைப் பேசிச் சென்றார்.
‘திருக்குறளின் வழி நின்று மோடி ஆட்சி நடத்துகிறார்’ என்று கூறியிருக்கிறார். உண்மையில், திருவள்ளுவர் உயிரோடு இருந்திருந்தால் மத்திய அரசையே சாடியிருப்பார். திருக்குறள், பொய்யில்லாமல் வாழ்வதே உயர்ந்த நெறி என்று சொல்கிறது. அந்தக் குறளைப் படித்தாலே, அமித்ஷா பொதுவெளியில் பொய்களைப் பேசுவதை நிறுத்திவிடுவார்,” என்று ஆ.ராசா சாடினார்.
மேலும், “தமிழகத்தில் யார் முதல்வராக வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நாக்பூரில் இருந்து முதல்வர்கள் வரமாட்டார்கள்; அறிவாலயத்திலிருந்தே வரும். உதயநிதியைப் பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்து விட்டது. 2026 சட்டசபைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணிக்கு உதயநிதி சமாதி கட்டுவார்,” என்று கடுமையாக தாக்கியுள்ளார்.
அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, கிரிக்கெட் அறிவு இல்லாமலேயே பிசிசிஐ செயலாளராகியதையும், பாஜகவில் குற்றப் பின்னணி கொண்ட அமைச்சர்கள் அதிகம் இருப்பதையும் ஆ.ராசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, “130வது அரசியல் சட்டத்திருத்தம் எனும் கருப்பு சட்டத்தை கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளை அடக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய குரல், அமித்ஷாவை கலக்க வைத்துவிட்டது. அதனால்தான் தமிழ்நாட்டிற்கு ஓடிவந்துள்ளார்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதே நேரத்தில், “ஊழல் குறித்து பேசும் தகுதி பாஜகவுக்கு இல்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டிருக்கும் பாஜக, கடந்த காலத்தில் அதே அதிமுக அரசையே ஊழல் ஆட்சி என்று சாடியது. ரஃபேல், தேர்தல் பத்திரம் உள்ளிட்ட மத்திய அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளை மக்களே நன்றாக அறிந்துள்ளனர்,” என்று ஆ.ராசா சாடினார்.
“தமிழ்நாடு இன்று நாட்டிலேயே பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கிறது. இதுவே அமித்ஷாவை உறுத்துகிறது. ஆனால் ஆயிரம் முயன்றாலும், பாஜகவின் பாசிச அரசியல் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது. 2026 தேர்தலில் மக்கள் பாஜகவையும் அதன் கூட்டணியையும் ஓட ஓட விரட்டிவிடுவார்கள்,” எனத் தெரிவித்தார்.
English Summary
It seems like Amit Shah is scared We are not AIADMK It is Udhayanidhi who is going to build a tomb for the BJP alliance A Rasa