யார் எங்கு சென்றாலும் கவலை இல்லை...! - அ.தி.மு.க. ஒன்றிணைப்பில் ஓபிஎஸ் உறுதி
It doesnt matter who goes where OPS affirms commitment to AIADMK unity
தேனி மாவட்டம் போடியில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து, அ.தி.மு.க. எதிர்காலம் குறித்து தெளிவாகவும் உறுதியாகவும் கருத்துகளை வெளியிட்டார்.
அவர் தெரிவித்ததாவது,"அ.தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே கட்சித் தொண்டர்களின் உள்ளார்ந்த விருப்பம். அந்த ஒன்றிணைப்பு சாத்தியமா என கேட்பவர்களுக்கு, ‘அது சாத்தியமாகவே ஆக வேண்டும்’ என்பதே எங்களின் பதில்.

அதற்காகத்தான் இந்த போராட்டம். இது இனி தனிப்பட்ட போராட்டமல்ல; மக்கள் குரலாக, தொண்டர் குரலாக இன்று எதிரொலிக்கிறது.”மேலும் அவர்,“அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் பலர் பின்னர் வேறு பாதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
செங்கோட்டையன் தற்போது த.வெ.க.வில் இணைந்துள்ளார். ஆனால், அ.தி.மு.க. ஒன்றிணைப்பு குறித்து முதன் முதலில் உரத்த குரல் கொடுத்தது நான்தான். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி நீண்ட காலம் ஆகிவிட்டது".தமிழக அரசியல் சூழலை சுட்டிக்காட்டிய அவர்,“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழக அரசியல் கள நிலவரங்களை தொடர்ந்து எடுத்துரைத்தோம்.
எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கியபோது, இது தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் தான் அதன் சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.”அந்த அடிப்படைச் சிந்தனைகள் சிதைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,“இன்று அந்த சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தின் அடையாளம் மங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான், பல சோதனைகள், வேதனைகள், அழுத்தங்கள் அனைத்தையும் கடந்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து சட்டபோராட்டம் நடத்தி வருகிறோம்
மேலும்,“கழகத்தின் சட்ட விதிகள் கேள்விக்குறியாக மாறி விடக் கூடாது என்பதில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறோம். ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்திருந்தாலும், அவர் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார்.
யார் எங்கு சென்றாலும் அதனால் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை".இறுதியாக அவர்,“எங்களுக்கான ஒரே இலக்கு – அ.தி.மு.க. ஒன்றிணைப்பு. அனைவரும் ஒருங்கிணைந்தால்தான் வெற்றி உறுதி.
கழகத்தின் சட்ட விதிகள் மீண்டும் மீட்டெடுக்கப்படும் வரை, எங்களின் சட்டபோராட்டம் தளராது; அது தொடர்ந்து நடைபெறும்” என்று வலியுறுத்தினார்.
English Summary
It doesnt matter who goes where OPS affirms commitment to AIADMK unity