தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலகம் இடமாற்றமா? நாமக்கல் கவிஞர் மாளிகையில் புதிய அலுவலகம் அமைக்கும் பணி தீவிரம்!இதுதான் காரணமா?
Is the Chief Minister office being relocated within the Secretariat Work on setting up a new office at the Namakkal Kavignar Maligai is in full swing
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் முக்கிய நிர்வாக மாற்றம் ஒன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த முதலமைச்சரின் அலுவலகம், அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக தமிழக முதலமைச்சர்களின் அலுவலகம் புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதன்மைக் கட்டிடத்தில்தான் இயங்கி வருகிறது. ஆனால், அண்மைக் காலமாக அலுவலகத்தில் இடநெருக்கடி அதிகரித்திருப்பதுடன், முதலமைச்சரை சந்திக்க தினமும் ஏராளமான பொதுமக்கள் வருவதால் நிர்வாக ரீதியாக சவால்கள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முதலமைச்சரின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 அடுக்குகளைக் கொண்ட அந்தக் கட்டிடத்தின் 10-வது தளத்தில் முதலமைச்சரின் புதிய அலுவலகம் அமைக்கப்படவுள்ளதாகவும், அதனுடன் முதல்வரின் நான்கு முதன்மைச் செயலாளர்களின் அலுவலகங்களும் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அந்தத் தளத்தில் செயல்பட்டு வந்த மாநாட்டு அரங்கம் மற்றும் உணவகப் பகுதிகளை மாற்றியமைக்கும் பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அங்கு இயங்கி வந்த தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை, வணிகவரி துறையின் சில பிரிவுகள் மற்ற தளங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து புதிய அலுவலகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இடமாற்றம் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. முதலமைச்சர் அலுவலகம் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்திலிருந்து வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டால், தமிழக வரலாற்றில் அவ்வாறு செய்யும் முதல் முதலமைச்சராக ஜோசப் விஜய் இருப்பார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதேநேரத்தில், இந்த முடிவு தேவையற்றது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "ஜோதிட ஆலோசனைகளின் அடிப்படையில் முதலமைச்சர் அலுவலகத்தை மாற்றுவது சரியான முடிவு அல்ல. காமராஜர் காலத்திற்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் அந்த அறைக்கு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. சில வசதிக் குறைபாடுகளுக்காக அந்த மரபை கைவிடக் கூடாது. தலைமைச் செயலகத்தை மாற்றுவது வேறு; முதலமைச்சர் அறையை மாற்றுவது வேறு. இத்தகைய முடிவு பொதுமக்களிடையே எதிர்மறையான கருத்துகளை உருவாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
எனினும், முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்படுவது, அதன் பின்னணியில் கூறப்படும் காரணங்கள் உள்ளிட்ட எந்த விவரத்தையும் தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனவே, வெளியாகியுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை உறுதி செய்யப்படாத தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.
English Summary
Is the Chief Minister office being relocated within the Secretariat Work on setting up a new office at the Namakkal Kavignar Maligai is in full swing