திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்? 20 பேருக்கு மாநிலப் பொறுப்பு வழங்க ஸ்டாலின் திட்டம்! தென்னரசுடன் ஆலோசித்த ஸ்டாலின்!
Reshuffle of DMK District Secretaries Stalin plans to assign state level roles to 20 members Stalin holds consultations with Thennarasu
திமுகவில் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 20 மாவட்டச் செயலாளர்களை மாற்றி, அவர்களுக்கு மாநில அளவிலான பொறுப்புகள் வழங்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக அறிவாலய வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மறுசீரமைப்பு பரிந்துரைகளை வழங்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது. 11 உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழு பல கட்ட ஆலோசனைகளை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய பிறகு, தங்கம் தென்னரசுவுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், அதன் பின்னர் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனையில், கட்சியில் போதிய அளவில் செயல்படவில்லை என்று கருதப்படும் சுமார் 20 மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களை ஒரே நேரத்தில் பொறுப்பில் இருந்து நீக்கினால் அதிருப்தி ஏற்படக்கூடும் என்பதால், அவர்களில் பலருக்கு மாநில அளவிலான பொறுப்புகள் வழங்கும் யோசனை பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், மாவட்டச் செயலாளர் பதவிகளில் வாரிசு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலும் கட்சித் தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை சுமார் 100 ஆக உயர்த்தும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றத்தின் மூலம் மாவட்ட அளவில் கட்சியின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இளைஞர் அணியைச் சேர்ந்த புதிய தலைமுறையினருக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க முடியும் என்று கட்சித் தலைமை நம்புவதாக கூறப்படுகிறது. சில மூத்த நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அமைப்பு ரீதியான மாற்றங்களை முன்னெடுப்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
English Summary
Reshuffle of DMK District Secretaries Stalin plans to assign state level roles to 20 members Stalin holds consultations with Thennarasu