ஓசூரில் அதிரடி லஞ்ச வேட்டை...! ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி. அதிகாரி அதிரடியாக கைது... அதிகாரிகளிடையே கலக்கம்...!
massive bribe hunt Hosur GST officer who demanded bribe 1 lakh arrested massive action There unrest among officials
ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே சீதாராம் மேடு பகுதியில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில், தொழிலதிபரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மாநில வரி அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி காலனியைச் சேர்ந்த கலையரசன் (45), ஓசூர் வடக்கு மாநில வரி அலுவலராக பணியாற்றி வந்தார்.

ஓசூர் ஜூஜூவாடி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் நம்பி (75), தனக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. தொகையைப் பெறுவதற்காக கலையரசனை அணுகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.அப்போது, ரூ.1 லட்சம் லஞ்சமாக வழங்கினால் மட்டுமே ஜி.எஸ்.டி. தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலையரசன் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு விருப்பம் இல்லாத நம்பி, சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தலைமையில், ஆய்வாளர் ரவி உள்ளிட்ட காவலர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூ.1 லட்சம் பணத்துடன் நம்பி வணிக வரித்துறை அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அந்தப் பணத்தை கலையரசனிடம் வழங்கியபோது, ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அதிரடியாகச் செயல்பட்டு அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து கலையரசனை கைது செய்த காவலர்கள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, வணிக வரித்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் சோதனை நடத்தினர்.
ஓசூரில் ஜி.எஸ்.டி. தொகையை பெற்றுத் தருவதற்காக தொழிலதிபரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
massive bribe hunt Hosur GST officer who demanded bribe 1 lakh arrested massive action There unrest among officials