பாஜக மீதான விமர்சனத்தை தீவிரப்படுத்துகிறாரா அண்ணாமலை? கன்னியாகுமரியில் நடக்கும் மெகா சம்பவம்! - Seithipunal
Seithipunal


பாஜகவில் இருந்து விலகி 'வி தி லீடர்ஸ்' அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை, மத்திய அரசையும் பாஜகவையும் விமர்சிக்கும் போக்கை படிப்படியாக தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஆகஸ்ட் 2-ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள மாநாட்டில் அவரது அரசியல் நிலைப்பாடு மேலும் தெளிவாக வெளிப்படும் என கூறப்படுகிறது.

பாஜகவில் இருந்து விலகிய பிறகு அண்ணாமலை தொடங்கிய 'வி தி லீடர்ஸ்' அமைப்பில் லட்சக்கணக்கானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற 'போதையில்லா பொள்ளாச்சி' மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றது அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்தது.

அதன் தொடர்ச்சியாக, 'என் குமரி, பசுமை குமரி' என்ற பெயரில் அடுத்த மாநாட்டை கன்னியாகுமரியில் நடத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்காக, 'வி தி லீடர்ஸ்' அமைப்பினர் கிராமம் தோறும் சென்று ஆதரவு திரட்டி வருவதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பாரம்பரியமாக பாஜகவுக்கு வலுவான ஆதரவு உள்ள பகுதியாக கருதப்படும் நிலையில், அங்கு அண்ணாமலை மாநாடு நடத்துவது அரசியல் ரீதியாக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அண்ணாமலையின் மாநாட்டுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என பாஜக தரப்பிலும் ஆதரவாளர்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை அண்ணாமலை வெளிப்படையாக விமர்சித்திருந்தார். அந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவரது புதிய அமைப்புக்கும் ஆதரவை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாநாட்டில் பாஜகவின் செயல்பாடுகள், தமிழக பாஜகவில் நிலவும் உள்கட்சி பிரச்சினைகள் மற்றும் மத்திய அரசின் சில கொள்கைகள் குறித்து அண்ணாமலை மேலும் கடுமையாக கருத்து தெரிவிக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதேநேரத்தில், சட்டமன்றத் தேர்தல் முடிந்துள்ளதால் மாநில அரசியல் குறித்து உடனடியாக தீவிர விமர்சனத்தில் ஈடுபடாமல், முதற்கட்டமாக தேசியக் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்தே கவனம் செலுத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும், பின்னர் மாநில அரசியல் குறித்து தனது நிலைப்பாட்டை படிப்படியாக வெளிப்படுத்துவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Annamalai intensifying his criticism of the BJP A mega event is unfolding in Kanyakumari


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->