சி.வி.சண்முகத்தை நீக்க எடப்பாடி ஆலோசனை? எடப்பாடி எடுக்கப் போகும் முடிவு! உட்சகட்ட டென்ஷனில் அதிமுக!
Is Edappadi considering removing CV Shanmugam The decision Edappadi is set to make AIADMK in a state of high tension
அதிமுகவில் தொடர்ந்து இருந்து கொண்டே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், சி.வி.சண்முகம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராகத் தொடரும் சூழல் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தி குரல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோர் தங்களது பழைய கட்சிப் பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்தலுக்குப் பிறகு கட்சியின் முக்கியப் பொறுப்புகள் பறிக்கப்பட்ட நிலையில், சி.வி.சண்முகம் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சித்து வருகிறார். சட்டப்பேரவையிலும், செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படையாக பதிவு செய்து வருவதுடன், “முடிந்தால் பொதுக்குழுவை கூட்டுங்கள்; முடிந்தால் என்னை கட்சியில் இருந்து நீக்குங்கள்” என சவால் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சி.வி.சண்முகத்தை கட்சியில் இருந்து நீக்கினால் அவர் தவெகவில் இணைந்து விடக்கூடும் என்ற அச்சம் அதிமுக தலைமைக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அவர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அவரது அடுத்த அரசியல் நகர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் சி.வி.சண்முகத்தை உடனடியாக நீக்குவதற்கு பதிலாக, இடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மறுபுறம், அவரை கட்சியில் இருந்து நீக்கினால் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாடு கட்சிக்குள் மேலும் வலுப்பெறும் என்றும் சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிருப்தி தலைவர்களிடையேயும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற வேலுமணியின் நிலைப்பாட்டை சி.வி.சண்முகம் விரும்பவில்லை என்றும், இதனால் இரு தரப்புக்கும் இடையே சமீபகாலமாக உரசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், சி.வி.சண்முகத்தை அவசரப்பட்டு கட்சியில் இருந்து நீக்க வேண்டாம் என்றும், தற்போதைய சூழலை இன்னும் சில காலம் கவனித்த பிறகு முடிவு எடுக்கலாம் என்றும் அதிமுகவின் சில மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், சி.வி.சண்முகம் மீது எடப்பாடி பழனிசாமி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார், நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர் தவெக பக்கம் நகர்வாரா என்பதே தற்போது அதிமுக அரசியலில் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
English Summary
Is Edappadi considering removing CV Shanmugam The decision Edappadi is set to make AIADMK in a state of high tension