மக்களுக்கு வேலை செய்யாம சினிமா வேலையா...? 'ஜனநாயகன்' படத்தில் மும்முரம் காட்டும் முதலமைச்சரை கிழித்துத் தொங்கவிட்ட டிடிவி தினகரன்...!
Is cinema job without working people TTV Dhinakaran who ripped apart Chief Minister who busy film Jananayakan
மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் தங்களது பொறுப்புகளை புறக்கணித்து, திரைப்பட வெளியீட்டு பணிகளில் ஆர்வம் காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு ஒன்று இறந்தும், அழுகிய நிலையிலும் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் அங்கன்வாடி மையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தகைய மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தில் அலட்சியம் ஏற்பட்டால், அது அவர்களின் உடல்நலனில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடித்து விரைவில் வெளியாக உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளில் ஆர்வம் காட்டுவது மிகவும் வருத்தமளிப்பதாகும்.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகளைப் போல் திரைப்படம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும்.எனவே, ரகுராமபுரம் அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை வழங்கிய ஒப்பந்ததாரர் மீதும், உரிய கண்காணிப்பை மேற்கொள்ளத் தவறிய அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் மற்றும் பிற ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை முறையாக ஆய்வு செய்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கைகளை சமூக நலத்துறையும், தமிழக அரசும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
Is cinema job without working people TTV Dhinakaran who ripped apart Chief Minister who busy film Jananayakan