திமுக–காங்கிரஸ் இடையே கடும் பேச்சுவார்த்தை!38 தொகுதிகள், 3 அமைச்சர்கள்.. திமுகவிடம் கேட்ட காங்கிரஸ்.. டெல்லிக்கு போனை போட்ட ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


வரவிருக்கும் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, திமுக–காங்கிரஸ் கூட்டணியில் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த முறை 38 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் 3 துறைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பு டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக–காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், காங்கிரஸ் கட்சி தரப்பில் அதிக தொகுதிகள் வேண்டும் என்ற குரல் தற்போது தீவிரமாக எழுந்துள்ளது. அந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி செல்லலாம் என்ற பேச்சுகள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே உலாவத் தொடங்கியுள்ளன.

இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பெரும்பாலும் திமுக கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பிரவீன் சக்ரவர்த்தி, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட சிலர் தவெகவுடன் நெருக்கம் காட்டி வருவது திமுக தரப்பில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பின்னணியில், சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையால் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது. அந்த சந்திப்பில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 38 தொகுதிகள் மற்றும் 3 அமைச்சரவை இடங்கள் கோரிய கடிதத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை பெற்றுக்கொண்ட ஸ்டாலின், திமுக தரப்பிலும் தனி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என பதிலளித்து அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பில், தமிழக காங்கிரஸ் நிலவரம் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான விவகாரங்கள் விரிவாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காங்கிரஸ் மேலிடத்துக்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து தகவல் அனுப்பப்பட்டதாகவும், அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சற்று அனுசரித்து செல்ல அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “திமுக மற்றும் காங்கிரஸ் தலைமைகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன” என்று கூறியிருந்தார். இதன் பின்னணியிலேயே, கிரிஷ் சோடங்கர், “தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது வதந்தி” என நேற்று செய்தியாளர்களிடம் வெளிப்படையாக தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு 38 அல்ல; 28 முதல் 30 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படும் வாய்ப்பே அதிகம் என கூறப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றிக்கு காங்கிரஸ் வேட்பாளரே காரணமாக அமைந்தார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

இதனால், இந்த முறை தொகுதி பங்கீட்டில் திமுக கடுமையான நிலைப்பாடு எடுக்கும் என்றும், கூட்டணியில் சமநிலை பேணும் வகையில் இறுக்கமாக செயல்படும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Intense talks between DMK and Congress 38 seats 3 ministers Congress asked DMK Stalin called Delhi


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->