இண்டி கூட்டணி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!
INDI Alliance Vice Presidential nominee B Sudershan nomination
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று (ஆகஸ்ட் 21) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தல், நாட்டின் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவிக்கான முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மகாராஷ்டிர ஆளுநரானதும் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் தெலங்கானாவைச் சேர்ந்தவருமான பி. சுதர்சன் ரெட்டி, இந்தியா கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்திய நீதித்துறையின் சிறந்த ஆளுமை” என்று புகழ்ந்து, கூட்டணிக் கட்சிகள் சார்பில் அவருக்கான ஆதரவைக் கோரினார்.
இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கல் நிகழ்வில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜவாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், திமுக எம்.பி. திருச்சி சிவா, சிவசேனை (யுபிடி) தலைவர் சஞ்சய் ரௌத் உள்ளிட்ட பலரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
English Summary
INDI Alliance Vice Presidential nominee B Sudershan nomination