கழிவறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ரேஷன் கடை அரிசி மூட்டைகள்: இதுதான் நல்லாட்சியின் லட்சணமா..? நயினார் நாகேந்திரன் கண்டனம்..!
I strongly condemn the DMK government for the ration shop rice stored in toilets Nayinar Nagendran
ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை சுகாதாரமற்ற நிலையில் கழிவறையில் அடுக்கி வைத்த திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுதான் நல்லாட்சியின் லட்சணமா..?என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் கழிவறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை சுகாதாரமற்ற நிலையில் கழிவறையில் அடுக்கி வைத்த திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுதான் நல்லாட்சியின் லட்சணமா?

இவ்வாறு பொறுப்பின்றி செயல்பட்ட அதிகாரிகளுக்கும் அவர்களைக் கண்காணிக்கத் தவறிய அமைச்சர்களுக்கும் கழிவறையில் அடுக்கி வைக்கப்பட்ட அதே அரிசி மூட்டைகளிலிருந்து ஆளுக்கொரு கிலோ அரிசியை எடுத்துக் கொடுத்து பொங்கி சாப்பிடச் சொல்ல வேண்டும்.
ஏழைகள் என்றால் எத்தனை இளக்காரம் இந்த ஆளும் அரசுக்கு? ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அல்லல்படும் மக்கள், ஆரோக்கியமற்ற முறையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களால் நோய்த்தொற்று ஏற்பட்டு அவதிப்பட வேண்டுமா?

கடந்த பட்ஜெட்டில் உணவு சேமிப்புத் துறைக்கான நிதியை திமுக அரசு குறைத்ததன் விளைவு தான் இன்று பராமரிப்பற்ற தானியக் கிடங்குகளில் உள்ள உணவுப் பொருட்கள் மழையில் நனைந்து அழுகி வீணாகிறது, ரேஷன் பொருட்களை சேமித்து வைக்க இடமில்லாமல் அரசு கழிவறையை நாடிச் செல்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவுப் பொருட்கள் முறையாக இருப்பு வைக்கப்படுகின்றனவா என்பதையும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்யவேண்டும். என்று நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
I strongly condemn the DMK government for the ration shop rice stored in toilets Nayinar Nagendran