'தேர்தலுக்குப் பின் கருவேல மரங்களை அகற்றப் புறப்படுவேன்'...! - வைகோவின் அதிரடி அறிவிப்பு
I set out remove Prosopis trees after election Vaiko Bold Announcement
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,தேர்தலுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பரவி விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் நேரடியாக ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு விசாரணைக்காக மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் நேரில் ஆஜரான பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது,விவசாயத்தை அழிக்கும் இந்த நச்சு மரங்களை அகற்ற வேண்டும் என 11 ஆண்டுகளுக்கு முன்பே தாம் பொதுநல வழக்கு தொடர்ந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் 39 வழிகாட்டுதல்களை வழங்கி, மாவட்ட ஆட்சியர்கள் இதனை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளதற்கு அவர் நீதித்துறைக்கு நன்றி தெரிவித்தார்.
கேரளாவில் இம்மரங்கள் முளைக்கும்போதே அகற்றப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் 1960-களில் விறகுக்காகக் கொண்டுவரப்பட்ட இந்த மரங்கள் தற்போது நிலத்தடி நீரையும் உயிரியல் சூழலையும் சிதைப்பதாகக் கவலை தெரிவித்தார்.
மேலும், சீமை கருவேல மரங்கள் வேரோடு அகற்றப்படாவிட்டால் மீண்டும் வேகமாக வளரும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை முழுமையாக அழிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதில் சாதி, மத, கட்சி வேறுபாடுகளைத் தாண்டிப் பொதுமக்கள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் ஒன்றிணைந்து தங்கள் பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற முன்வர வேண்டும் என்றும் வைகோ அழைப்பு விடுத்தார்.
English Summary
I set out remove Prosopis trees after election Vaiko Bold Announcement