அதிமுகவில் அதிரடி ஆக்ஷன்...! திருத்தணி கோ.அரியின் பதவி பறிப்பு...! - எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு...!
Action AIADMK Tirutani K hari position removed Edappadi Palaniswami orders action
சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் அ.தி.மு.க.வில் கடும் உள்கட்சி அதிர்வுகள் உருவாகியுள்ளன. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் தனி அணியொன்று உருவாகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் தோல்வியை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சிக்குள் கருத்து மோதல் வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் நடைபெற்ற தொடர் சம்பவங்கள் காரணமாக அ.தி.மு.க.வில் உட்கட்சி பிளவு வெளிப்படையாகத் தெரியும் நிலை உருவாகியுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிக்க சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி முன்வந்தது. இதை அவர்கள் வெளிப்படையாக அறிவித்தது அக்கட்சிக்குள் அரசியல் சூட்டை அதிகரித்துள்ளது.
சட்டசபையில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட விவகாரம் அ.தி.மு.க.வில் பெரும் அரசியல் புயலை கிளப்பிய நிலையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேரிடமிருந்து மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி காலியாகிய பதவிகளுக்கு புதிய மாவட்டச் செயலாளர்களையும் அவர் நியமித்துள்ளார். இதன் மூலம் கட்சிக்குள் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், சி.வி.சண்முகம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான திருத்தணி கோ.அரியின் கட்சிப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுஇதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொறுப்பிலும் இருந்த திருத்தணி கோ.அரி, சட்டமன்ற உறுப்பினர், இன்று முதல் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடலூர் வடக்கு மாவட்ட கடலூர் மாநகர கழகச் செயலாளர் பொறுப்புக்கு கடலூர் சி.கே.எஸ்.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளராக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அ.தி.மு.க.வில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த உள்கட்சி மோதல், தமிழக அரசியல் அரங்கில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Action AIADMK Tirutani K hari position removed Edappadi Palaniswami orders action