பெண்களின் போராட்டத்திற்கு வெற்றி...? - 717 மதுக்கடைகளை மூடிய முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் பாராட்டு...!
Victory women struggle Vanathi Srinivasan praises Chief Minister closing 717 liquor shops
பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"முதலமைச்சராக பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டிருக்கும் முதல்-அமைச்சர் விஜயின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்த முடிவிற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று சட்டம்-ஒழுங்கு சீர்கேடு. மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் பெருகியதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் எளிதாக கிடைக்கும் சூழல் உருவானது. இதனால் இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கிக்கொண்டதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவம், மாநிலத்தின் பாதுகாப்பு நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மதுக்கடைகள் மற்றும் போதைப்பொருட்களின் நடமாட்டமற்ற தமிழ்நாட்டை உருவாக்கினால்தான் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும். பெண்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும். அதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக 717 மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பது முக்கியமான தொடக்கமாக அமைய வேண்டும்.
முன்னதாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலையோர டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோதும், அவை அமைதியாக உள்புற சாலைகளுக்கு மாற்றப்பட்டதாகவும், அதைவிட பல மடங்கு சட்டவிரோத சந்து கடைகள் உருவாகியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ்நாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்து கடைகள் இயங்கி வருவதாக கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த சட்டவிரோத விற்பனைகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் எப்.எல்.2 உரிமம் என்ற பெயரில் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்களுக்கு மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டன.
இந்த மன்றங்கள் சமூக சீரழிவை வேகப்படுத்தியதோடு, மது அருந்துவதை சமூக அந்தஸ்தின் அடையாளமாக இளைஞர்களிடையே மாற்றியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக மாறுவதற்கு இந்த மனமகிழ் மன்றங்களே முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சமூகக் கிளப்புகள் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எப்.எல்.2 மதுபான உரிமங்களை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.மது மற்றும் போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க படிப்படியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
அதற்கான முதற்கட்டமாக எப்.எல்.2 உரிமங்களை ரத்து செய்வது அவசியம்.மேலும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு கடையிலும் நடைபெறும் விற்பனை விவரங்கள், எந்த நிறுவனங்களிடமிருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன, அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் யார் என்பன உள்ளிட்ட தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Victory women struggle Vanathi Srinivasan praises Chief Minister closing 717 liquor shops