''ஓடவும் இல்லை.. ஒழியவும் இல்லை.. பதுங்கவும் இல்லை.. திமுகவுக்கு இது பழக்கம் இல்லை''; சென்னை திரும்பிய எ.வ. வேலு..!
I am neither running or escaping says DMK EV Velu
திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு,''ஓடுவது, ஒளிவது, பதுங்குவது எல்லாம் திமுகவுக்கு பழக்கம் இல்லை. அரசியலை, அரசியலாக சந்திப்பதில் திமுக சளைத்தது இல்லை'' என்று இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தான் இதயப் பிரச்சினைக்காக 2016-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில், மருத்துவர் ஜெயராமனிடம் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், 2023-இல் அதே மருத்துவமனையில் இரண்டாம் முறையாக உடல் பரிசோதனை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், இப்போது மீண்டும் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என கடந்த ஜூன் 15-ஆம் தேதியே அவர் விசாவுக்கு விண்ணபித்து, ஜூன் 17-ஆம் தேதி விசா வழங்கியவுடன், அன்றைய தினமே, ஜூன் 25-ஆம் தேதி சிங்கப்பூர் செல்ல டிக்கெட் புக் செய்தாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜூன் 25-ஆம் தேதி காலையில் என் வீட்டுக்கு காவல்துறை நண்பர்கள் வந்ததோடு, சோதனை மேற்கொள்வதாக சொன்னார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறியுள்ளார். அதன் பின்னர் ஜூன் 26-ஆம் தேதி மீண்டும் டிக்கெட் புக்செய்து சிங்கப்பூர் சென்றதாகவும், அங்கு தனக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது அவருக்கு அலர்ஜி, நரம்பு பிரச்சினை, இதயப் பிரச்சினை என மூன்று பிரச்சினைகள் உள்ளதாகவும், இது தொடர்பாக தொடர்ச்சியாக மருத்துவப் பரிசோதனைகள் எனக்கு மேற்கொள்ளப்பட்டன. இந்த முறை என்னென்ன மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டது என ரிப்போர்ட் தன்னிடம் உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தன்னை ஜூன் 03-ஆம் தேதி விசாரணைக்கு வரச்சொல்லி என் வீட்டில் சம்மன் ஒட்டியதாக எனக்கு தகவல் சொன்னதாகவும், அதனை பேக்ஸில் அனுப்ப சொல்லி, நான் மருத்துவ பரிசோதனைகள் முடித்து 10 நாட்களில் வந்துவிடுவேன் என அந்த சம்மனுக்கு பதில் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால், மீண்டும்09-ஆம் தேதி வரச்சொல்லி சம்மன் அனுப்பினார்கள் என்று சுட்டிக்காட்டியதோடு, மருத்துவ பரிசோதனைகள் முடித்து நான் ஜூலை 12-ஆம் தேதி சென்னை வந்துவிடுவேன் என்றும், அதன் பின்னர் எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கடிதம் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றதாக கூறிய எ.வ. வேலு, சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்ததாகவும், முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்கு பின்னாலும்,'' ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார்'' என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள் என்றும், நான் மருத்துவத்துக்காக சென்றேனே தவிர, சுற்றுலா செல்லவில்லை என்றும், ஆனால், அவரவர் கற்பனைக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

திமுகவின் சட்டப்பேரவை கொறடாவாக நான் உள்ளேன் என்றும், சமீபத்தில் 03 நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகமான வினாக்களை நான் தான் எழுப்பினேன் என்று குறிப்பிட்டுள்ளார். அது என்னுடைய கடமை என்றும், நான் பேசவே கூடாது என அவர்கள் நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இனி எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும், நான் எந்த குற்றமும் செய்யவில்லை, குற்றம் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்று எ.வ. வேலு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
English Summary
I am neither running or escaping says DMK EV Velu