கரூர் துயர சம்பவம்: வேதனையை வெளிப்படுத்தியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!
Home Minister Amit Shah and President Draupadi Murmu have expressed their grief over the Karur tragedy
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை மேற்கொண்டார். அங்கு விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும் போது நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து, கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 08 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்-ஷா உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் இறைவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவம் தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
'தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.'என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Home Minister Amit Shah and President Draupadi Murmu have expressed their grief over the Karur tragedy