புதிய வரி முறைக்கு 'பூஸ்ட்' கிடைக்குமா? - நடுத்தர வர்க்கத்தை ஈர்க்க நிர்மலா சீதாராமன் வைத்திருக்கும் 'சர்ப்ரைஸ்' என்ன?
new tax regime boost What surprise does Nirmala Sitharaman store attract middle class
நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் மீது ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும் பதிந்துள்ளது. முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சவால்கள் முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால், இந்த பட்ஜெட் பசுமைப் பொருளாதாரம், வேளாண் புத்துயிர் மற்றும் சுகாதார மேம்பாடு ஆகியவற்றை மையப்புள்ளியாகக் கொண்டு அமையும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

குறிப்பாக, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், 'பிரதமரின் ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கான வீட்டுவசதி வாய்ப்புகளை விரிவாக்கக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புள்ளது.
மருத்துவத்துறையைப் பொறுத்தவரை, மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவதுடன், சுகாதாரக் கட்டமைப்பில் நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்துவதற்கும், கல்விச் சுமைகளைக் குறைப்பதற்கான ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விதிப்பைப் பொறுத்தமட்டில், பழைய வரி முறையில் மாற்றங்கள் செய்வதைத் தவிர்த்து, பொதுமக்களை புதிய வரி முறையை (New Tax Regime) நோக்கி ஈர்க்கும் வகையிலான சலுகைகள் இடம்பெறக்கூடும்.
கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களால் வாகனங்களின் விலை ஏற்கனவே சீரடைந்துள்ளதால், இந்த பட்ஜெட்டில் மின்னணு மற்றும் வாகனப் பொருட்களின் விலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இருக்காது என்றே தெரிகிறது.
மறுபுறம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால், அந்த மாநிலங்களைக் கவரும் விதமாகப் புதிய ரயில்வே திட்டங்கள் மற்றும் மெகா சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் முன்னுரிமை பெறலாம்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதால், இந்த பட்ஜெட் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு 'வளர்ச்சி இன்ஜினாக' அமையும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
English Summary
new tax regime boost What surprise does Nirmala Sitharaman store attract middle class