''அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, மீறினால் கடும் நடவடிக்கை''; முதலமைச்சரின் கரூர் நிகழ்ச்சியை நேரலை செய்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்..!
Headmistress suspended after political program was broadcast live in government school
கரூரில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், இன்று முதலமைச்சரின் கரூர் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகாவை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ''அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி'' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி! அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு காணொளி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற மாண்புமிகு முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம்.
பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும். இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துகிறேன்.
எனது அருமை ஆசிரியர்களே.. கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று அமைச்சர் ராஜ்மோகன் பதிவிட்டுள்ளார்.
English Summary
Headmistress suspended after political program was broadcast live in government school