20 வருடங்களுக்கு முன் விஜயகாந்த் சந்தித்த கஷ்டம்…அதே நிலை விஜய்க்கும்...! – பிரேமலதா சொன்னது என்ன..?
hardships Vijayakanth faced 20 years ago same situation for Vijay What did Premalatha say
தமிழக அரசியலில் புதிய அரசியல் அதிர்வுகளை கிளப்பும் நோக்கில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாநிலம் முழுவதும் “உள்ளம் தேடி – இல்லம் நாடி, கேப்டன் ரத யாத்திரை புரட்சி பயணம்” மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, அவர் திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்தார். அங்கு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய பிரேமலதா, உற்சாகக் கூட்டத்தில் உரையாற்றினார்.இந்த நிகழ்வில், கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ், மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பிரேமலதா:
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தெரிவித்ததாவது,"வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில், எங்களின் அரசியல் நிலைப்பாடு, யாருடன் கூட்டணி அமைப்போம், தேர்தல் உத்திகள் என்ன என்பதற்கு தெளிவான பதிலை அறிவிப்போம்.
அரசியலுக்குள் புதிய அடியெடுத்து வைத்துள்ள விஜய்க்கு எனது வாழ்த்துக்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் தனித்துவமான பாணி இருக்கும். அதுபோல, விஜயும் தனது சொந்த ஸ்டைலில் கட்சியை தொடங்கி, மக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் எப்படி பேச வேண்டும் என்பதை அவருக்கே நன்றாகத் தெரியும்.
அவரை விமர்சிக்கவோ, குறைசொல்லவோ, ஆலோசனை வழங்கவோ நாங்கள் இல்லை.இப்போது விஜய்க்கு அரசியல் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளைப் போல, 20 ஆண்டுகளுக்கு முன்பே அதைவிட கடுமையான சவால்களை சந்தித்து வெற்றி கண்டவர் விஜயகாந்த்தான். அரசியலில் புதிதாக களமிறங்குபவர்கள் எவரும் சவால்களை தவிர்க்க முடியாது.
ஆனால் அந்த சவால்களை முறியடித்து முன்னேறும்போது மட்டுமே மக்களால் உண்மையான அங்கீகாரம் கிடைக்கும்.மேலும், திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வரும் தலைவர்கள் பொதுமக்களிடம் பிரபலமானவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிர்கொள்ள வேண்டிய அழுத்தங்களும் அதிகம் இருக்கும்.
ஆனால் நாங்கள் அந்த அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் பார்த்தும், தாண்டியும் வந்தவர்கள். எனவே இவை எங்களுக்கு புதிதல்ல; பெரிதுமல்ல,” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
hardships Vijayakanth faced 20 years ago same situation for Vijay What did Premalatha say