துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு காவலர் தற்கொலை!
rajasthan police suicide
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா மாவட்டச் சிறையின் கண்காணிப்புக் கோபுரத்தில் பணியில் இருந்த ராம்கிஷோர் மோடிவால் (37) என்ற ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர், தனது சர்வீஸ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் சனிக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது.
சிறைக் காவலர் ராம்கிஷோர் தனது ஷிஃப்ட் முடிவடைவதற்குச் சற்று முன்பு, மார்பில் சுட்டுக்கொண்டதாகவும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் சிறைக் கண்காணிப்பாளர் சைலேந்திர சிங் தெரிவித்தார். மற்றொரு காவலர் அவரை விடுவிக்க வந்தபோது, ராம்கிஷோர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு உடனடியாகச் சிறை நிர்வாகத்திற்குத் தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்குத் தடயவியல் குழு விரைந்து வந்து ஆதாரங்களைச் சேகரித்தது. பின்னர், அவரது உடல் கூராய்வுக்காக மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் உடனடியாக எதையும் கண்டறியவில்லை. உயிரிழந்த காவலர் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள ஹர்மடா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், சனிக்கிழமை தான் விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பியுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ராம்கிஷோரின் மூத்த சகோதரர் நானுராம், தனது சகோதரரின் மரணம் சந்தேகத்திற்குரியது என்று கூறி கோட்வாலி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான சரியான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.