காவலர் குடும்பத்துக்கு உறுதுணையாக நிற்கும் அரசு...! - ரூ.30 லட்சம் நிதியுதவியை அறிவித்தார் விஜய்...!
government stands by policeman family Vijay announced financial assistance 30 lakhs
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கத்தி சோதனைச்சாவடி அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் உயிரிழந்த வெள்ளக்கோவில் காவல் நிலைய காவலரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் – கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறுக்கத்தி சோதனைச்சாவடி அருகே, அதிவேகமாக வந்த லாரி சாலைத்தடுப்பில் மோதி சேதமடைந்த நிலையில், அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளக்கோவில் காவல் நிலைய காவலர் ப.ரவிச்சந்திரன் (36) மீது, அவ்வழியாக வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்ற துயரச் செய்தி என்னை மிகுந்த மனவேதனைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.
கடமை உணர்வுடன் பணியாற்றிய காவலர் ப.ரவிச்சந்திரனின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
தன்னலமின்றி பணியாற்றிய காவலரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், உடன் பணியாற்றிய காவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், உயிரிழந்த காவலர் ப.ரவிச்சந்திரனின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
government stands by policeman family Vijay announced financial assistance 30 lakhs