பயணிகளுக்கு குட் நியூஸ்! கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்? தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Good news for passengers When will the kilampakkam railway station open Southern Railway announcement
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் (Kilambakkam Railway Station) மார்ச் மாதம் முதல் வாரத்தில் செயல்பட தொடங்க வாய்ப்புள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அப்டேட்டை ரயில்வே துணை மேலாளர் வெளியிட்டுள்ளார்.
கோயம்பேட்டில் இயங்கி வந்த புறநகர் மற்றும் வெளியூர் பேருந்து சேவைகள், 2024 இறுதியில் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டன. தற்போது தனியார் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட பெரும்பாலான வெளியூர் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையம், சென்னை நகரத்திலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால், பயணிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
நகரின் மையப்பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல பேருந்தில் குறைந்தது 1.30 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகும் நிலையில், போக்குவரத்து நெரிசல் நேரங்களில் பயண நேரம் மேலும் அதிகரிக்கிறது. இதற்குத் தீர்வாக, கிளாம்பாக்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியது. அதன்படி கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
மேலும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் ஸ்கைவாக் (Skywalk) அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்தால், சென்னை நகருக்குள் இருந்து ரயிலில் வந்து நேரடியாக பேருந்து நிலையத்தை அடைய முடியும் என்பதால், பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலில் கடந்த ஆண்டிலேயே ரயில் நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஸ்கைவாக் உள்ளிட்ட பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பயன்பாட்டுக்கு வருவது தள்ளிப்போனது. இந்த நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு குறித்து ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் செயல்பட தொடங்க வாய்ப்புள்ளது. இம்மாதத்திலேயே ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CRS) கிளாம்பாக்கம் ரயில்வே வழித்தடத்தை ஆய்வு செய்ய உள்ளார். அந்த ஆய்வு முடிந்ததும் தேவையான அனுமதிகள் வழங்கப்படும். மேலும், ஆய்வுக்குப் பிறகு பறக்கும் ரயில் திட்டத்தின் கீழ் வேளச்சேரி – பரங்கிமலை வழித்தடமும் மார்ச் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்பட்டால், சென்னை நகரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும், போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Good news for passengers When will the kilampakkam railway station open Southern Railway announcement