ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு முதல் பேராசிரியர் நியமனம் வரை...! அரசின் அறிவிப்புகளை வரவேற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி...! - Seithipunal
Seithipunal


அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 6,000 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக வெளியான அறிவிப்புக்கும், கவுரவ மற்றும் பகுதி நேர விரிவுரையாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக 6,000 உதவிப் பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இந்த நியமனங்களை எவ்வித காலதாமதமும் இன்றி விரைந்து மேற்கொள்ள வேண்டும்.அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

அதேபோல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் பகுதி நேர விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதும் பாராட்டுக்குரியது.இருப்பினும், தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொண்டு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வு மட்டும் போதுமானதாக இருக்காது.

எனவே, தொகுப்பூதியத்தை மேலும் உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ மற்றும் பகுதி நேர விரிவுரையாளர்களுக்கும் இந்த ஊதிய உயர்வை விரிவுபடுத்த வேண்டும்.மேலும், பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றும் பகுதி நேர மற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆண்டுக்கு 7 முதல் 8 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடைமுறையை மாற்றி, அவர்களுக்கு ஆண்டின் 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.பெண் விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பும் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும். உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. இந்தக் கடன் எந்தவித தடையும் இன்றி, வட்டி இல்லாமல் மாணவர்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஆறாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வி வழங்கப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் அறிவிப்பும், 2,771 உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கவை. அரசுப் பள்ளிகளில் நீண்டகாலமாக காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2010-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

இந்த முடிவின் மூலம் சுமார் 3 லட்சத்து 28 ஆயிரத்து 701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். 15 முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவமிக்க ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பும் இதன்மூலம் உறுதி செய்யப்படும்.கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் 23-வது பிரிவில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதுடன், தேசிய ஆசிரியர் கல்விப் பேரவை மூலம் தேவையான சுற்றறிக்கையையும் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

From job security teachers appointment of professors Communist Party of India welcomed government announcements


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->