எல்லாம் போச்சு! சல்லி சல்லியாக நொறுங்கிய விஜய்யின் கூட்டணி திட்டம்! தனித்துப் பிரச்சாரத்தை தொடங்கிய தவெக!யோசனையில் விஜய்!
Everything is gone Vijay alliance plan has collapsed Vijay has started a solo campaign Vijay is in the idea
சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் சூழலில், தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் விமர்சித்து, “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என ஆரம்பத்திலேயே அறிவித்த தமிழக வெற்றி கழகம் (தவெக), தற்போது அரசியல் ரீதியாக தனித்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திமுக, அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளும் தங்களது கூட்டணிகளை பெரும்பாலும் உறுதி செய்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துவிட்டது. இவ்வாறு முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது பாதையை தெளிவுபடுத்தியுள்ள சூழலில், தவெக மட்டும் இதுவரை எந்தக் கூட்டணியையும் உறுதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மாநாட்டிலேயே “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற முழக்கத்தை முன்வைத்த தவெக, இரண்டு ஆண்டுகள் கடந்தும் அதற்கேற்ற அரசியல் தாக்கத்தை உருவாக்கவில்லை என்ற விமர்சனம் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. அதிமுக, விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவை அனைத்தும் தற்போது சாத்தியமற்றதாகவே தெரிகிறது. அதிமுக–பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விசிக மற்றும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பில்லை. தவெகவுக்கு ஆதரவு காட்டிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், தற்போது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துவிட்டார்.
இதனால், தேர்தல் அறிவிப்பிற்கு முன்னரே தவெக அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக திமுக மற்றும் பாஜக தரப்பினர் விமர்சனம் முன்வைத்து வருகின்றனர். மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை, விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கல்கள் போன்றவை தவெக தலைமைக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, விஜய் பொதுவெளியில் தோன்றாமல் அமைதியாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.
இந்த சூழலில், தவெகவுக்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ என்ற பொதுச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், திருச்செங்கோடு தொகுதியில் விசில் சின்னத்தை மக்களிடம் வழங்கி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கூட்டணியில் எந்தக் கட்சியும் இணையாத நிலையில், தவெக தனித்தே களமிறங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ், “எங்கள் தலைவர் மக்களுடன் நேரடியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். எங்கு சென்றாலும், எப்போது பொதுச் சின்னம் கிடைக்கும் என்றே மக்கள் கேட்டார்கள். விசில் சின்னம் கிடைத்ததில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் உள்ளது. திருச்செங்கோடு நகரம் மற்றும் ஒன்றியங்கள் முழுவதும் விசில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். விரைவில் கியூஆர் கோட் அடிப்படையில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடத்த உள்ளோம்” என்றார்.
மற்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணிகளை முடிவு செய்து விட்ட நிலையில், இனி தவெகவுடன் யார் இணையப் போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்கள் தலைவர் மக்களையே கூட்டணியாகக் கொண்டு தேர்தலை சந்திக்கிறார். வெற்றியை மக்கள் நேரில் பார்க்கத்தான் போகிறார்கள்” என தெரிவித்தார்.
இந்நிலையில், தவெக தனித்து போட்டியிடுவது தமிழக அரசியல் களத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, வரும் நாட்களில் தெளிவாகும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
English Summary
Everything is gone Vijay alliance plan has collapsed Vijay has started a solo campaign Vijay is in the idea