ஓபிஎஸ், டிடிவி பற்றி பேசுவது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம்..!! - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்..!!
eps criticized ops and ttv dinakaran
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒரத்தநாட்டில் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேருரை ஆற்றினார். அப்பொழுது பேசிய அவர் வைத்தியலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் "ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை துரோகியன விமர்சனம் செய்தார். டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என விமர்சனம் செய்தார். இப்படி பல கருத்துக்களை சொல்லிய இருவரும் ஒன்றாக இணைந்து ஆட்சியைப் பிடிக்க போகிறார்களாம். மீண்டும் கழகத்தை பிடிக்கப் போகிறார்களாம்.
எந்த ஒரு காலத்திற்கும் அதிமுகவை உங்களால் கைப்பற்றவே முடியாது. ஏனென்றால் அதிமுகவில் இருக்கும் அனைத்து தொண்டர்களும் உண்மையானவர்கள். அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை இவர்கள் இருவரால் மட்டுமல்ல அவர்களுடன் இருப்பவர்களால் கூட அதிமுகவை கைப்பற்ற முடியாது.

இவர்களைப் பற்றி பேசுவதே வேஸ்ட், இவர்களை பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. செத்த பாம்பை அடிப்பது போன்று. ஏனென்றால் நீதிமன்றத்திற்கு சென்றார்கள், ஆனால் இங்கே இருக்கும் தொண்டர்கள் பக்கம் தீர்ப்பு வந்து விட்டது. பிறகு தேர்தல் ஆணையமும் இங்கே இருக்கும் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அதிமுக சொந்தம் என கூறிவிட்டது.
எனவே இனி அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் சொத்தில் இருந்து ஒரு செங்கல்லை கூட உங்களால் பிடுங்க முடியாது. அதிமுகவின் தலைமை அலுவலகத்தை உடைத்து அங்கே இருந்த ஆவணத்தை திருடி சென்ற ஆசாமிகள் தான் இவர்கள். எனவே இனி அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. இனி அதிமுக என்று சொன்னால் அது நாம் தான். எனவே நமக்கு எதிரி திமுக மட்டும் தான்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
eps criticized ops and ttv dinakaran