எடப்பாடி பழனிசாமியின் தாய் மாமா மகன் கே.பி.எஸ். ராஜா அதிமுகவில் இருந்து திடீர் விலகல்..!
Edappadi Palaniswami maternal uncle KPS Raja suddenly leaves AIADMK
அதிமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அக்கட்சியின் மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும் எடப்பாடி பழனிச்சாமியின் தாய்மாமன் மகனுமான கே.பி.எஸ். ராஜா அறிவித்துள்ளமை அதிமுகவில் என்னதான் நடக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கட்சியிலிருந்து விலகுவது குறித்து கே.பி.எஸ். ராஜா, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
''கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பல்வேறு கட்சிப் பணிகளைத் திறம்பட ஆற்றி வந்துள்ளேன். மறைந்த ஜெயலலிதா என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர், ஒன்றிய கழக செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் எனப் பல முக்கியப் பொறுப்புகளை எனக்கு வழங்கினார்.

அம்மாவின் ஆசியோடு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் தலைவர், மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் BSNL மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் போன்ற அரசுப் பதவிகளை வகித்து, ஜெயலலிதாவின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளேன்.
கடந்து வந்த அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற, இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும், கட்சியின் போராட்டங்களிலும் முன்னின்று உழைத்துள்ளேன். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார்.
ஆனால், அதன் பிறகு கடந்த 10 ஆண்டு காலமாக எனக்கு மக்கள் பணி செய்யத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் மிகுந்த மனவருத்தத்துடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Edappadi Palaniswami maternal uncle KPS Raja suddenly leaves AIADMK