முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வழக்கின் தொடர்ச்சி: கரூரில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் மற்றும் பொறியாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை!
DVAC Intensifies Corruption Probe Raids Expand to Senthil Balajis Confidant and Others in Karur
திமுவகைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தி வரும் நிலையில், இதன் தொடர்ச்சியாகக் கரூர் மாவட்டத்திலும் சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும், பிரபல அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி. சங்கர் ஆனந்த் இல்லம் உட்படப் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தற்பொழுது தீவிர சோதனையில் இறங்கியுள்ளது.
செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் சோதனை
கரூர் பழனியப்பா தெருவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் எம்.சி. சங்கர் ஆனந்த். இவர் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மிக நெருங்கிய நண்பராகவும், முக்கிய அரசு ஒப்பந்ததாரராகவும் (Government Contractor) அறியப்படுபவர். இன்று காலை எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் பாய்ந்த 'சங்கரானந்த் இன்ப்ரா' டெண்டர் முறைகேடு வழக்கின் தொடர்ச்சியாக, இரண்டு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இவருக்குச் சொந்தமான வீட்டை முற்றுகையிட்டுத் தங்களது அதிரடிச் சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும் பல இடங்களில் ரெய்டு
சங்கர் ஆனந்த் வீடு மட்டுமன்றி, கரூரின் பல்வேறு முக்கியப் புள்ளிகளின் வீடுகளிலும் இந்தச் சோதனை வலை விரிக்கப்பட்டுள்ளது:
கார்த்தி இல்லம்: கரூரின் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள கார்த்தி என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பொறியாளர் ரபிக் இல்லம்: சென்னை உதவி கோட்டப் பொறியாளராக (Assistant Divisional Engineer) பணியாற்றி வரும் ரபிக் என்பவருக்குச் சொந்தமான, கரூர் பள்ளப்பட்டி ஆசாத் நகர் பகுதியில் உள்ள இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புச் சோதனை தீவிரமாக நடைபெறுகிறது.
20 அதிகாரிகள் குழு முகாமிட்டு விசாரணை
ஆக மொத்தமாக, லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் அடங்கிய தனிப்படை தற்பொழுது கரூரில் முகாமிட்டு, ஒரே நேரத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் தங்களது ஆவணச் சரிபார்ப்பு மற்றும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இந்த மெகா சோதனை எந்தவொரு குறிப்பிட்ட தனிப் புகாரின் அடிப்படையில் நடைபெறுகிறது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், சாலை விரிவாக்க டெண்டர் முறைகேடு மற்றும் முறையற்ற பணப்பரிமாற்ற விவகாரங்களின் பின்னணியிலேயே இந்தச் சோதனை நகர்வதாகக் கூறப்படுகிறது. முழுமையான சோதனைகள் நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட சொத்து விபரங்கள் குறித்து முழுமையாகத் தெரியவரும்.
English Summary
DVAC Intensifies Corruption Probe Raids Expand to Senthil Balajis Confidant and Others in Karur