தி.மு.க-வில் அதிரடி மாற்றம்...! இளைஞர்களை களம் இறக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
Dramatic change DMK Chief Minister MK Stalin bring youth field
சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, கட்சியின் அமைப்பு மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள தி.மு.க. தலைமை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ள தலைமை செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக அமையாத நிலையில், தோல்விக்கான காரணங்களை விரிவாக ஆராயவும், கட்சியின் நிர்வாக அமைப்பை சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக மாவட்டம் வாரியாக கட்சியின் செயல்பாடுகள், நிர்வாகிகளின் பங்களிப்பு மற்றும் கள நிலவரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டதுடன், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமும் கருத்துகள் பெறப்பட்டன.பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு விரிவான அறிக்கையாக தயாரிக்கப்பட்டு கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றிருந்ததாகவும், அதன் அடிப்படையில் கட்சியின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு குறித்து தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.தி.மு.க.வில் தற்போது அமைப்பு ரீதியாக 78 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இவர்களில் கட்சிப் பணிகளில் போதிய சுறுசுறுப்புடன் செயல்படாத சில நிர்வாகிகளின் பதவிகள் மாற்றப்படலாம் என்ற பேச்சு கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
அதேவேளையில், மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிதாக மாவட்ட செயலாளர்களை நியமிப்பது, பிற கட்சிகளில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனைகளின் முடிவில் கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.கட்சியின் அமைப்பு சீரமைப்பில் வயது மற்றும் பதவிக்காலம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
70 வயதைக் கடந்தவர்களிடம் இருந்து மாவட்ட செயலாளர் பொறுப்புகளை மாற்றுவது குறித்தும், ஒரே பதவியில் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் இருப்பவர்களை மாற்றுவது குறித்தும் பரிசீலனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.மேலும், ஒன்றிய, நகர, பேரூர் உள்ளிட்ட அமைப்புகளில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக, நீண்ட காலமாக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளிடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள மூத்த மாவட்ட செயலாளர்களுக்கு, கட்சியின் தலைமை அமைப்பில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
துணை பொதுச்செயலாளர், வழிகாட்டுதல் குழு உறுப்பினர், அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் ஒருபகுதியாக, கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் 40-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல் வருகிற 22-ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் பெறப்படலாம் என கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையே, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெறும் முதல் தலைமை செயற்குழு கூட்டம் என்பதாலும், கட்சியின் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாலும், இந்தக் கூட்டம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
Dramatic change DMK Chief Minister MK Stalin bring youth field