வெளியான மரணச்செய்தி - அதிர்ச்சியில் மருத்துவர் இராமதாஸ்!
Dr Ramadoss Mourning To Shanmugavel Padaiyatchi
தமிழக அரசில் துணை ஆட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அம்பாசமுத்திரம் சண்முகவேல் படையாட்சி மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், "திருநெல்வேலி மாவட்ட வன்னியர் சங்கத்தை உருவாக்கியவரும், தமிழக அரசில் துணை ஆட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான அம்பாசமுத்திரம் சண்முகவேல் படையாட்சி அவர்கள் முதுமை காரணமாக இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மறைந்த சண்முகவேல் படையாட்சி அவர்கள் மிகுந்த சமுதாய பற்று கொண்டவர். வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து சங்கத்திலும், கட்சியிலும் என்னுடன் தொடர்ந்து பயணித்தவர். என்மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். வன்னியர் நலனுக்காக என்னுடன் இணைந்து பணியாற்றியவர். இதற்காக தமிழ்நாட்டில் போகாத ஊரே இல்லை எனும் அளவுக்கு எல்லா ஊர்களுக்கும் சென்றவர்.

திருச்செந்தூரில் வன்னியர்கள் தங்கும் விடுதி மற்றும் திருமண அரங்கத்தை அரும்பாடுபட்டு நிறுவிய பெருமை சண்முகவேல் படையாட்சிக்கு உண்டு. சமைக்காத உணவு/ இயற்கை உணவு முறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதற்காக அனைவரிடமும் பிரச்சாரம் செய்தவர். அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்ட நல்ல மனிதர் சண்முக வேல்.
சண்முகவேல் படையாட்சியாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். செங்கோட்டையில் இன்று நடைபெறும் சண்முகவேல் படையாட்சி அவர்களின் இறுதி சடங்குகளில் அங்குள்ள வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொள்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Mourning To Shanmugavel Padaiyatchi