இது அப்பட்டமான பழிவாங்கும் செயல்., தமிழக அரசுக்கு அவசர கோரிக்கை விடுத்த Dr. அன்புமணி ராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக் கேட்டதற்காக தொழிற்சங்க  நிர்வாகிகள் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்து ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் குறிப்பாணை வழங்கப்பட்ட 24 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அநீதிக்கு எதிராக போராடிய பெரியாரின் பெயரிலான பல்கலை.,யில் இத்தகைய சமூக அநீதி இழைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சக்திவேல், கனிவண்ணன், செந்தில்குமார், கிருஷ்ணவேணி ஆகிய நால்வரும் மார்ச் 4-ஆம் நாள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.  பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரேம்குமார் 5-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்த நாட்களில் செய்யப்பட்டுள்ள இந்த பழிவாங்கும் நடவடிக்கைகள் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர், பணியாளர் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியரும்  செய்த குற்றம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் தவறுகளையும், விதிமீறல்களையும் தட்டிக் கேட்டது தான். இவர்கள் மீதான நடவடிக்கைகளில் எந்த விதியையும், மரபையும் துணைவேந்தர் கடைபிடிக்கவில்லை.

பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சக்திவேல், கனிவண்ணன், செந்தில்குமார், கிருஷ்ணவேணி ஆகிய நால்வரும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறி, அப்போதைய துணைவேந்தரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் போது தங்கள் சார்பில் வாதிட வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ள அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த  வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, அவசரம் அவசரமாக விசாரணை நடத்தி, அவர்கள் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை பணி நீக்க ஆட்சிக்குழு ஒப்புதல் பெற வேண்டும்; ஆனால், ஆட்சிக்குழு ஒப்புதல் இல்லாமலேயே அவர்கள் பணி நீக்கப்பட்டுள்ளனர்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப் படவில்லை. பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குனர், நூலகர், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதி அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்காமல்,  துணை வேந்தருக்கு ஒத்துப்போகும் ஆசிரியர்கள் அப்பதவிகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு நிலையில் தொடர்கின்றனர். 

இந்த அநீதிகளுக்கு எதிராக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பிரேம்குமார் போராடியதாக தெரிகிறது. இயற்பியல் துறைத் தலைவராக பணியாற்றும் பேராசிரியருக்கு சட்டவிரோதமாக ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்க நடந்த முயற்சியை முறியடிக்கும்படி ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு பிரேம்குமார் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. ஆளுனர் மூலம் ஆட்சிக்குழு உறுப்பினராக தகுதியற்ற ஒருவரை துணைவேந்தர் பரிந்துரைத்ததை எதிர்த்தும் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பிரேம்குமார் குரல் கொடுத்தார்.

துணைவேந்தரின் தவறுகளை தட்டிக்கேட்டதற்காக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பிரேம்குமாருக்கு  மார்ச் 4-ஆம் தேதி மாலை குறிப்பாணை அனுப்பிய நிர்வாகம், அதற்கு 24 மணி நேரத்தில் பதில் தர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியது. அவரும் மார்ச் 5 ஆம் தேதி மாலைக்குள் விளக்கம் அளித்த நிலையில்,  விடுமுறை நாளான மார்ச் 5-ஆம் தேதி சனிக்கிழமை இரவு நேரத்தில் அவரை பணியிடை நீக்கம் செய்வதற்கான ஆணை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாணை அனுப்பப்பட்டது முதல் பணியிடை நீக்க ஆணை வழங்கப்பட்டது வரை அனைத்தும் ஒன்றரை நாட்களில் முடிந்துள்ளது. தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் எந்த ஆசிரியரும் இவ்வளவு அவசரமாக  நீக்கப்பட்டதில்லை; இவ்வளவு அப்பட்டமாக பழிவாங்கப்பட்டதும் இல்லை.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட முனைவர் ஜெகநாதன், பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்யவில்லை. கல்வி மேம்பாட்டுக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டுக்கும் புதிதாக எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக, தமக்கு ஆதரவான  குழுவை உருவாக்கிக் கொண்டு, பிடிக்காதவர்களை பழிவாங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தமிழக அரசுக்கும், உயர்கல்வித் துறைக்கும் ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தான் அவரது சர்வாதிகாரம்  தொடர்கிறது. பல்கலைக்கழகங்களில் பணியாளர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் அனுமதிக்கப்பட்டவை தான். பல்கலைக்கழகங்கள் நெறி தவறாமல் செயல்படுவதற்கான கடிவாளங்கள் அவை. நிர்வாகத்தின் தவறுகளை தட்டிக் கேட்டதற்காக தொழிற்சங்கவாதிகளை துணைவேந்தர் பழிவாங்கும் போக்கை அரசு அனுமதித்தால், அடுத்த சில மாதங்களில் பெரியார் பல்கலைக்கழகம் மீள முடியா சீரழிவில் சிக்கி விடும்.

எனவே, பெரியார் பல்கலைக்கழகத்தை சீரழிவிலிருந்து தமிழக அரசு காப்பாற்ற வேண்டும். அதற்காக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் துணைவேந்தர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Salem Periyar University Issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->