செப்டம்பரில் தொடங்கும் திமுக மறுசீரமைப்பு! உச்சப் பதவிக்கு வரும் கனிமொழி! உதயநிதி அதிருப்தி? குழம்பும் ஸ்டாலின்!
DMK restructuring to begin in September Kanimozhi set for a top post Udhayanidhi dissatisfied Stalin in a dilemma
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் தொடங்கப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள திமுகவின் முப்பெரும் விழாவுக்குப் பிறகு கட்சி அமைப்பில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் அண்ணா அறிவாலய வட்டாரங்களில் பரவி வருகின்றன.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயும் நோக்கில், முதற்கட்டமாக தொகுதி வாரியாக 38 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டன. அந்த அறிக்கைகள் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தங்கம் தென்னரசு தலைமையில் மேலும் ஒரு உயர்மட்ட குழுவை ஸ்டாலின் அமைத்துள்ளார். இந்தக் குழுவில் எழிலன் நாகநாதன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்த தேவையான மாற்றங்கள் குறித்து விரிவான பரிந்துரைகளை வழங்க இந்தக் குழுவுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது லண்டன் பயணத்தில் உள்ள ஸ்டாலின், தமிழகம் திரும்பிய பிறகு மறுசீரமைப்பு பணிகளில் முழு கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையை ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் மாத முப்பெரும் விழா நிறைவடைந்த பிறகு புதிய நிர்வாக மாற்றங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மறுசீரமைப்பில், தற்போது திமுக துணைப் பொதுச்செயலாளராக உள்ள கனிமொழிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு அவரை பரிசீலிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் பொதுச்செயலாளர் துரைமுருகனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்ற கனிமொழியின் அந்தச் சந்திப்பும் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இதேவேளை, கட்சி அமைப்பை அடிமட்டத்தில் வலுப்படுத்தும் நோக்கில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தை உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. நீண்டகாலமாக மூத்த நிர்வாகிகள் ஆதிக்கம் செலுத்தும் சில மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளைப் பிரித்து, இளம் தலைமுறை நிர்வாகிகளுக்கு பொறுப்பளிக்க வேண்டும் என்ற யோசனையும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அண்மைக் காலமாக கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே கட்சி அமைப்பு தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், வரவிருக்கும் மறுசீரமைப்பு திமுகவில் தலைமுறை மாற்றத்திற்கும், புதிய நிர்வாக கட்டமைப்பிற்கும் வழிவகுக்கும் முக்கிய கட்டமாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.
English Summary
DMK restructuring to begin in September Kanimozhi set for a top post Udhayanidhi dissatisfied Stalin in a dilemma