CM ஸ்டாலினின் ரோடு ஷோ ரத்து...!
DMK MK Stalin Road show
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பேரிடர் காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்ள இருந்த ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பயணம் மற்றும் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. பின்னர் புதிய தேதியில் அரசு நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி ராமநாதபுரம் எல்லையான பார்த்திபனூரில் திட்டமிடப்பட்டிருந்த ரோடு ஷோவும், திமுக நிர்வாகிகள் சந்திப்பும் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து சாலை வழியாக ராமநாதபுரம் செல்ல உள்ளார். அன்றிரவு அவர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுப்பார்.
மறுநாள் (செப்டம்பர் 3) காலை காரில் புல்லங்குடி அருகே நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று சுமார் 55 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவார். மேலும் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிகழ்ச்சி முடிந்து அவர் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் திரும்புகிறார்.