73 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் அந்த ஒரு வழக்கு... உச்சநீதிமன்றம் வேதனை!
SC Court case india
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கி கிடப்பது குறித்த வழக்கு, கடந்த வாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய நீதித்துறை புள்ளிவிவரங்கள் (NJDG) அளித்த தகவலின்படி, நாடு முழுவதும் மொத்தம் 5.34 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் உயர் நீதிமன்றங்களில் 63.8 லட்சம் வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் 88,251 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
வழக்குகள் தீர்ப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு 15 முக்கிய காரணங்கள் உள்ளன. அதில் வழக்கறிஞர் இல்லாததால் 62 லட்சம், குற்றச்சாட்டுக்குட்பட்டவர்கள் தலைமறைவதால் 35 லட்சம், சாட்சிகள் வராததால் 27 லட்சம், மேல் நீதிமன்ற இடைக்கால தடை காரணமாக 23 லட்சம், தேவையான ஆவணங்களுக்காக காத்திருப்பதால் 14 லட்சம், மனுதாரர்கள் ஆர்வமின்மை காரணமாக 8 லட்சம் வழக்குகள் தாமதமாகி வருகின்றன.
உயர் நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் சில வழக்குகள் பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ளன. அதில் 1952ல் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு 73 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது கவலைக்குரியது.
இதையடுத்து, வழக்கறிஞர் இல்லாததால் விசாரணை ஒத்திவைக்கக் கூடாது என மாவட்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்குட்பட்டவர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் நோக்கமுடன் விசாரணையை தாமதப்படுத்தினால் ஜாமீனை ரத்து செய்யும் வாய்ப்பு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.