தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக முடிவு? அதிர்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த்..!தெலுங்கு லாபிக்குள் ஸ்டாலினின் கேம்!
DMK decision to reduce DMDK seats Premalatha Vijayakanth in shock Stalin game within the Telugu lobby
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், கூட்டணி கட்சிகளின் கோரிக்கையால் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை குறைக்க திமுக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML), மமக, காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆனால் முக்கிய கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) ஆகியவற்றுடன் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
தேமுதிகவை கூட்டணியில் சேர்த்தபோது, அந்தக் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா இடம் மற்றும் 9 சட்டசபைத் தொகுதிகள் வழங்க திமுக முன்வந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.
ஆனால் தற்போதைய பேச்சுவார்த்தையில் விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கோரி வலியுறுத்தி வருவதால், திமுகக்கு தொகுதி பங்கீடு சிக்கலாகி உள்ளது. இதனால் தேமுதிகவிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, 9 தொகுதிகளை 7 ஆக குறைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையை அமைச்சர் எ.வ.வேலு மூலம் திமுக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே ராஜ்யசபா இடம் வழங்கப்பட்டபோது பிரேமலதா விஜயகாந்த் பெரிதாக உற்சாகமாக இல்லை என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக இந்த தொகுதி பங்கீடு பிரச்சனையை திமுக தலைமையகம் சுமூகமாக தீர்க்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சமநிலையை எப்படி ஏற்படுத்துகிறது என்பதையே அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கும்.
English Summary
DMK decision to reduce DMDK seats Premalatha Vijayakanth in shock Stalin game within the Telugu lobby