காங்கிரஸ் திமுக-வின் முதுகில் குத்தவில்லை.. வாக்களித்த மக்களின் முதுகில் குத்தியுள்ளது - குமுறும் திமுக!
DMK Condemns Congress Move to Support TVK
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்காகக் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரியிருந்த நிலையில், காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை வழுங்குவதாக அறிவித்து, ஆதரவு கடிததியும் நேரில் சென்று வழங்கியுள்ளது.
இதன் மூலம் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிகாரபூர்வமாக முறிந்துள்ளது. இந்த நிலையில், நீண்ட காலமாக திமுக கூட்டணியில் பயணித்த காங்கிரஸ், தற்போது எடுத்திருக்கும் இந்த நிலைப்பாடு குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தவெக-விற்கு ஆதரவு அளிப்பது என்ற காங்கிரஸின் முடிவானது திமுக-வின் முதுகில் குத்துவதற்குச் சமமல்ல, மாறாகத் தங்களுக்கு வாக்களித்த ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் முதுகில் குத்துவதற்குச் சமம் என்று அவர் சாடியுள்ளார். வெறும் இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸின் செல்வாக்கைப் பலிகொடுக்க அவர்கள் முடிவெடுத்துவிட்டார்களா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த முடிவு ஒருவேளை டெல்லி தலைமையால் எடுக்கப்பட்டிருந்தால், அதனை வெளிப்படையாக அறிவிக்கக் காங்கிரஸ் அச்சப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸின் இந்த நகர்வு தேசிய அளவிலான இந்தியா (I.N.D.I.A) கூட்டணியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்கள் மத்தியில் காங்கிரஸின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் என்றும், இனிமேல் காங்கிரஸ் கூறும் எந்தக் காரணத்தையும் பிற கட்சிகள் ஏற்கத் தயாராக இருக்காது என்றும் சரவணன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
English Summary
DMK Condemns Congress Move to Support TVK