2026 தேர்தலில் முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் தேமுதிக –இருந்தாலும் இந்த பில்டப் ஆகாது.. குமுறும் கேப்டன் சொந்தங்கள்
DMDK struggling to make a decision on the 2026 elections even if it exists this buildup will not happen Captain relatives are angry
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிகளை ஓரளவுக்கு உறுதி செய்துவிட்ட சூழலில், ஒரு காலத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக மட்டும் எந்த அணியில் சேருவது என்ற முடிவை எடுக்க முடியாமல் அரசியல் இழுபறியில் சிக்கித் தவித்து வருகிறது.
“எங்களுக்கு எல்லாருமே தோழமை கட்சிகள்தான். தேமுதிக சேரும் கூட்டணியே ஆட்சி அமைக்கும். தேமுதிக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” என பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து கூறி வரும் கருத்துகள், திமுக மற்றும் அதிமுக இரு தரப்பினரிடமும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த நேரத்தில், இத்தகைய பேச்சுகள் தேமுதிகவுக்கு சாதகமாக அமையாமல், மாறாக வாய்ப்புகளை இழக்கும் நிலையை உருவாக்குகிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
விஜயகாந்த் தலைமையில் தொடங்கப்பட்ட தேமுதிக, ஆரம்ப காலங்களில் தமிழக அரசியலில் வேகமாக வளர்ந்த ஒரு இயக்கமாக இருந்தது. 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் கிடைத்த வெற்றி கட்சிக்கு உறுதியான அடித்தளமாக அமைந்தது. தொடர்ந்து 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உயர்ந்தது. அந்த நேரத்தில் தேமுதிக, தமிழக அரசியலின் மாற்று சக்தியாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் 2016 தேர்தலில் “மக்கள் நல கூட்டணி” என்ற புதிய அரசியல் முயற்சியில் இறங்கியதே தேமுதிகவின் அரசியல் பாதையை மாற்றியது. அதன் பின்னர் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த கட்சி, ஒருகாலத்தில் 8 சதவீதத்துக்கும் மேல் இருந்த வாக்கு சதவீதத்திலிருந்து, தற்போது 1 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இந்தச் சூழலில், 2026 தேர்தல் தேமுதிகவுக்கு ஒரு அக்கினி பரீட்சை என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும், அவருக்கான தனிப்பட்ட செல்வாக்கே தேமுதிகவின் அடிப்படை வாக்கு வங்கியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு, பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் மீதான ஈர்ப்பு ஆகியவை இன்னும் முழுமையாக அழியவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்தச் செல்வாக்கை சரியான அரசியல் பேரமாக மாற்றிக் கொள்ளாமல், அதிக கோரிக்கைகள் மூலம் வாய்ப்புகளை வீணடிக்கிறார் பிரேமலதா என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
தற்போதைய பேச்சுவார்த்தைகளில், திமுக மற்றும் அதிமுக இரு தரப்பினரிடமும் தேமுதிக 20 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்ற நிபந்தனையுடன் பேசுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனால், முதற்கட்ட பேச்சுவார்த்தையிலேயே இரு பெரிய கட்சிகளும் கதவை சாத்தியதாக கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 6 முதல் 10 தொகுதிகளும், திமுக தரப்பில் 5 அல்லது 6 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.
மேலும், மாநில மாநாட்டில் பிரேமலதாவை துணை முதல்வராக்குவோம் என எல்.கே.சுதீஷ் பேசியதும், “நாங்கள் இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” என பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் தொடர்ச்சியாக கூறிவருவதும், திமுக–அதிமுக தலைமைக்கு கூடுதல் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ராஜ்யசபா சீட் குறித்து எந்த தரப்பும் உறுதியான வாக்குறுதி அளிக்காததால், குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்வதா அல்லது இழுத்தடிப்பதா என்ற குழப்பத்தில் தேமுதிக தற்போது சிக்கியுள்ளது.
தனித்து போட்டியிட மாட்டோம் என பிரேமலதா உறுதியாக கூறியுள்ள நிலையில், தேமுதிக முன்னால் தற்போது மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அல்லது விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் ஒன்றைத் தேர்வு செய்வது. ஆனால் தவெக பக்கம் செல்வது அரசியல் ரீதியாக அதிக அபாயம் கொண்ட முடிவு என்பதால், அந்த வாய்ப்பை தேர்ந்தெடுப்பது கடினம் என தேமுதிக வட்டாரங்களே கூறுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் விஜயகாந்த் மறைவால் ஏற்பட்ட அனுதாப அலை தேமுதிகவுக்கு ஓரளவு சாதகமாக அமைந்தது. விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், பல தொகுதிகளில் தேமுதிக பெற்ற வாக்குகள் அதிமுகவுக்கு மறைமுக பலமாக மாறியதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, தென்காசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் கிடைத்த கூடுதல் வாக்குகள், விஜயகாந்த் மீதான தனிப்பட்ட ஈர்ப்பு மற்றும் பிரேமலதாவின் பிரச்சாரம் ஆகியவற்றின் கலவையாகவே பார்க்கப்படுகிறது. தொகுதி ஒன்றுக்கு சராசரியாக 5,000 முதல் 8,000 வாக்குகள் வரை தேமுதிகவுக்கு உறுதியான ஆதரவு இருப்பதாகவும் மதிப்பீடுகள் கூறுகின்றன.
2026 தேர்தலில் நடிகர் விஜய் களத்தில் இருப்பதால் திமுக மற்றும் அதிமுக வாக்குகள் பிளவுபடும் சூழல் உருவாகலாம். அப்படியான நிலையில், இந்த குறைந்த வாக்கு வித்தியாசமே வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறும். அதனால்தான் இரு திராவிட கட்சிகளும் தேமுதிகவை முழுமையாக புறக்கணிக்காமல், ஒரு எல்லை வரை பேச்சுவார்த்தையை இழுத்துச் செல்கின்றன.
ஆனால் 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் கடைசி வரை கூட்டணியை உறுதி செய்யாமல் இழுத்தடித்ததே தேமுதிக அரசியல் ஓரங்கட்டலுக்கு தள்ளப்பட்டதற்கான காரணம் என்பதை அரசியல் விமர்சகர்கள் நினைவுபடுத்துகின்றனர். 2026 தேர்தலிலும் அதே தவறு மீண்டும் நடந்தால், தேமுதிக இன்னும் பெரிய அரசியல் பின்னடைவை சந்திக்கும் அபாயம் இருப்பதாகவும், கட்சித் தொண்டர்களின் மனநிலை மேலும் தளர்ந்து போகும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
English Summary
DMDK struggling to make a decision on the 2026 elections even if it exists this buildup will not happen Captain relatives are angry