தர்மபுரியா? சேலமா? – விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு… சின்னம் என்னது? சஸ்பென்சை உடைக்க போறாராம்.. குஷியில் தவெக
Dharmapuri Salem Vijay next public meeting What is the symbol He is going to break the suspense Khushi is in a daze
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு எங்கு நடைபெற உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி, அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தை விஜய் மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தவெக கட்சியின் சின்னம் குறித்த அறிவிப்பும் இதே மேடையில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கிய விஜய், 2026 சட்டசபைத் தேர்தலே தனது இலக்கு என்றும், திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என்றும் வெளிப்படையாக அறிவித்திருந்தார். மேலும், தன்னுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இருப்பினும், செங்கோட்டையனைத் தவிர பெரிய அரசியல் கட்சிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக தவெகவுடன் இணைவதை அறிவிக்கவில்லை.
அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்திற்கு பிறகு, விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு நடைபெறாமல் இருந்தது. இதற்குக் காரணமாக, ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு தொடர்பான பணிகளில் விஜய் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்பட்டது. அரசியல் பின்னணி கொண்ட இந்த திரைப்படம் வெளியான பிறகு பொதுக்கூட்டங்களை தீவிரப்படுத்தலாம் என்ற திட்டத்தில் விஜய் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அந்தப் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தச் சூழலில்தான், விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு தர்மபுரி அல்லது சேலம் மாவட்டங்களில் ஒன்றில் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் தவெக சின்னம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், அதற்காகவே இந்த நிகழ்வு மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான சின்னத்தை ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், கூட்டணி அரசியல் தொடர்பாகவும் இந்த பொதுக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. தேமுதிக, அமமுக, ஓபிஎஸ், பாமக (ராமதாஸ்), புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கட்சிகள் தவெகவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தால், அவர்களை நேரடியாக மேடையேற்றி அறிமுகப்படுத்தும் திட்டமும் விஜய்க்கு இருப்பதாக கூறப்படுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என சில கட்சிகள் கூட்டணி முடிவை ஒத்திவைத்துள்ளதால், இந்த மக்கள் சந்திப்பு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இதனிடையே, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக ஒரு சிறப்பு குழுவையும் விஜய் அமைத்துள்ளார். தமிழக மக்களின் முன்னேற்றம், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு, பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், தொழில் அமைப்புகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை சேகரித்து, தரவுகளின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதனால், விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு என்பது சின்ன அறிவிப்பு மட்டுமல்லாமல், கூட்டணி அரசியலுக்கான முக்கிய திருப்புமுனையாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த கூட்டம் நடைபெறும் இடமும், மேடையில் யார் யார் இடம் பெறப்போகிறார்கள் என்பதையும் நோக்கி, தமிழக அரசியல் களம் தற்போது உற்று நோக்கி இருக்கிறது.
English Summary
Dharmapuri Salem Vijay next public meeting What is the symbol He is going to break the suspense Khushi is in a daze