தவெக ஆட்சிக்கு 5 ஆண்டுகள் முழுமையாக ஆதரவு நீடிக்குமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெ. சண்முகம் கொடுத்த அதிர்ச்சி!
CPM Boycotts TVK Alliance Meet State Secretary P Shanmugam Slams Assembly Chaos and CM Vijay Remarks
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நாளை நடைபெறவுள்ள தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தங்களது கட்சி பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் சட்டப்பேரவையானது, பொதுமக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மன்றமாகச் செயல்பட வேண்டுமே தவிர, கூச்சலிடும் சண்டை மன்றமாக மாறுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று அவர் தெரிவித்தார். ஆளுங்கட்சி என்ற முறையில் அவையைச் சீராக நடத்துவதில் தவெகவிற்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய முக்கியக் கேள்விகள் ஒன்றுக்குக் கூட முதலமைச்சர் விஜய் முறையான பதிலளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய பெ. சண்முகம், 3 முக்கியக் கோப்புகள் மேஜையில் இருப்பதாகக் கூறிவிட்டு, 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சர்க்காரியா கமிஷன் விவகாரங்களை இப்போது கிளறுவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிசா கைது குறித்துச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசியது முற்றிலும் அறியாமையின் வெளிப்பாடு என்றும், வரலாற்று உண்மைகளை அறியாமல் திமுக மீதான வெறுப்பில் சேற்றை வாரி வீசுவதைத் தவிர்க்கத் தவெக அமைச்சர்கள் நிறையப் படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மார்க்சிஸ்ட் கட்சி என்றும் உறுதியாக உள்ளது என்றும், ஆனால் தவெகவின் நிலைப்பாட்டில் சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்த அவர், சட்டப்பேரவையின் பொன்னான நேரம் வீணான விவாதங்களால் விரயமாகுவதை இடதுசாரிகள் எதிர்ப்பதாகக் கூறினார்.
வரவிருக்கும் தேர்தல்களைக் கூட்டணியாகச் சந்திக்க வேண்டும் எனத் தவெக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது தவெக அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும் என்றும், ஆனால் 5 ஆண்டுகள் முழுமையாக ஆதரவு நீடிக்குமா என்பது தவெக அரசின் செயல்பாடுகளையும் நிலைப்பாடுகளையுமே பொறுத்தது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
English Summary
CPM Boycotts TVK Alliance Meet State Secretary P Shanmugam Slams Assembly Chaos and CM Vijay Remarks