''பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்''; தமிழக அரசுக்கு சிபிஐ கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


''தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமூக ரீதியாகப் பொருத்தமான மாற்று இடங்களை அரசு பரிசீலிக்க வேண்டும்'' என 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

''பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்மொழிவு தவறானது. மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள், கடலோரச் சூழலியல், காலநிலைப் பாதிப்புகள், பொதுமக்களின் கடற்கரை அணுகல் மற்றும் அரசின் முக்கியமான நிர்வாக நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியவை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும்.

தமிழ்நாடு அரசு இம்முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

முல்லைக்குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர் மற்றும் நொச்சிக்குப்பம் உள்ளிட்ட ஒன்பது மீனவக் குடியிருப்புகள், முன்மொழியப்பட்ட இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளன.

சுற்றியுள்ள மீனவக் குடியிருப்புகளின் மக்கள், கடலை வெறும் குடியிருப்புப் பகுதியாக மட்டும் சார்ந்திருக்கவில்லை. அது அவர்களின் வாழ்வாதாரத்தின் அடித்தளமாகவும், பொது வளமாகவும் உள்ளது. மீன்பிடித்தல், படகுகளின் இயக்கம், மீன் இறக்குதல், வலைகள் மற்றும் மீன்களை உலர்த்துதல், மீன் விற்பனை, சேமிப்பு உள்ளிட்ட  பல்வேறு மீன்பிடி சார்ந்த தொழில்கள் இக்கடலோரப் பகுதியைச் சார்ந்தே நடைபெறுகின்றன.

இத்தகைய குறுகிய கடலோரப் பகுதியில் மிகப்பெரிய நிர்வாக வளாகம், அதனுடன் சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படுவது, ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியுள்ள கடலோரப் பகுதியை மேலும் பாதிக்கும். 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்கும், பொருளாதார ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்படும் நிலைக்கும் தள்ளப்படுவர்.

உயர் பாதுகாப்பு கொண்ட அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தின் வருகையால் தடுப்புகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும், முக்கியப் பிரமுகர்களின் வாகனப் போக்குவரத்து, காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியமர்த்தல் போன்றவை தவிர்க்க முடியாததாகும். இதன் விளைவாக, மக்களுக்கு பொதுவாகச் சொந்தமான கடற்கரைப் பகுதி படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக - பாதுகாப்பு வளாகமாக மாறும் அபாயம் உள்ளது.

மேலும், காலநிலை அவசரநிலை நிலவும் இன்றைய சூழலில் இத்தகைய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது பொருத்தமற்றதும் ஆபத்தானதுமாகும். சென்னையின் கடலோரப் பகுதிகள் புயல்கள், கடல் எழுச்சி, வெள்ளம், கடலோர அரிப்பு மற்றும் கடல் மட்ட உயர்வு போன்றவற்றால் அதிகரித்து வரும் ஆபத்தை எதிர்கொள்கின்றன.

எனவே, அரசு பாதுகாப்பான மாற்று இடங்களை ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் ஆவணங்களில், இப்பரந்த கடலோரப் பகுதி சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எளிதில் உள்ளாகும் பகுதிகளும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முன்மொழியப்படும் வளாகத்தை “பசுமை வளாகம்” என்று அழைப்பதால் மட்டும் அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகிவிடாது. நிலையான வளர்ச்சி என்பது பசுமைக் கட்டிடத்தை உருவாக்குவதில் தொடங்குவதில்லை; சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில்தான் தொடங்குகிறது.

மாநிலத்திற்கு நவீன நிர்வாகக் கட்டமைப்பு தேவைப்படலாம். ஆனால் நிர்வாக நவீனமயமாக்கல் என்ற பெயரில் உணர்திறன் மிக்க கடலோரப் பகுதியை ஆக்கிரமிப்பதும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதும், பொதுமக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதும், ஜனநாயகப் பொது வெளியைச் சுருக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமூக ரீதியாகப் பொருத்தமான மாற்று இடங்களை அரசு பரிசீலிக்க வேண்டும்'' என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPI urges Tamil Nadu government to cancel the new Secretariat project at Pattinapakkam


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->