"சட்டமன்ற ஜனநாயக மாண்புகளைக் காக்க வேண்டும்; சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்": இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
CPI Urges Speaker to Act Impartially and Ruling Party to Protect Assembly Dignity Welcomes Action on Women's Safety
சட்டமன்ற ஜனநாயக மாண்புகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்றும், பேரவை நடவடிக்கைகளின் போது சபாநாயகர் முற்றிலும் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாகக் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், சட்டமன்றப் பதிலுரையில் பெண்களுக்கு எதிராக இழிவுபடுத்தும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சமூக வலைதளங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதையும் தடுத்து நிறுத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்ப்புள்ள ஜனநாயகத்தில் சட்டமன்ற நடவடிக்கைகள் மக்களின் கோரிக்கைகளுக்காகவும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவுமே கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள சிபிஐ, எதிர்க்கட்சிகளின் குரலுக்குச் செவிசாய்த்துத் தக்க பதிலளிப்பதற்குப் பதிலாக, கூச்சல் மிகுந்த வாதங்களால் சட்டமன்றத்தின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சட்டமன்ற மரபையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் ஆளுங்கட்சிக்கு அதிக பொறுப்பு உள்ளது என்றும், சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றும் அக்கட்சி தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
English Summary
CPI Urges Speaker to Act Impartially and Ruling Party to Protect Assembly Dignity Welcomes Action on Women's Safety