புதிய கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்பு; 40 இடங்ககளை தமிழக அரசிடமே ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
Supreme Court orders that 40 super specialty medical seats be handed over to the Tamil Nadu government
தமிழ்நாட்டில் நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு களுக்கான 2025-26-ஆம் கல்வியாண்டு கலந்தாய்வில் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வந்தது.
அந்த இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு திருப்பி அளித்து, அதன்மூலம் தகுதி பட்டியலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட கலந்தாய்வை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தமிழகத்தை சேர்ந்த தமிழ்வாணி உட்பட மருத்துவ மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்திய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'கட் ஆப் மதிப்பெண் சதவிகிதத்தை குறைப்பதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்னை உள்ளது' என கேள்வி எழுப்பி வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் இன்று நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே அடங்கிய அமர்வில்மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,''மருத்துவ படிப்பு தொடர்பான விவகாரத்தில் 50 முதல் 30 வரை கட் ஆப் மதிப்பெண் சதவீதத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும். அடுத்த 02 வாரத்தில் அனைத்தும் நடைமுறைகளும் முடிக்கப்படும்.'' என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட இந்திய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு கட்-ஆப் மதிப்பெண் சதவீதத்தை ஜீரோவாக குறைக்க வேண்டும் என்றும், கடந்த 2022-23, 2023-24 ஆகிய ஆண்டுகளில் அவ்வாறு செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இதனால் தமிழ்நாடு மாணவர்கள் மிகவும் பலனடைவார்கள் என்றும், குறிப்பாக தமிழகத்திற்கு என்று ஒதுக்கப்படும் இன்சர்வீஸ் பங்கீட்டை ஏன் மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும் என்பது எங்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ''கட் ஆப் மதிப்பெண் சதவீதத்தை 50 முதல் 30 வரையில் குறைக்க திட்டமிட்டுள்ளோம் என்ற மத்திய அரசின் வாதங்களை ஏற்கிறோம்.
இருப்பினும் இது தமிழ்நாடு இன் சர்வீஸ் மாணவர்களுக்கு (அரசின் மருத்துவத்துறையில் நிரந்தர பணியில் பணியாற்றி வருபவர்கள்) மட்டுமே பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
எனவே அந்த 40 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை தமிழக அரசிடம் உடனடியாக மத்திய அரசு திருப்பி வழங்க வேண்டும் என்றும், அதன் பின்னர், புதிய கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புக்கு ஒரு வாரத்தில் கலந்தாய்வை நடத்தி, அடுத்த 02 வாரத்தில் மற்ற அனைத்து நடைமுறைகளையும் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Supreme Court orders that 40 super specialty medical seats be handed over to the Tamil Nadu government