என்.எல்.சி. நிர்வாகம் தனது வாக்குறுதியை உறுதிப்படுத்திட வேண்டும்! கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதும், உயிர் இழப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மின்நுகர்வு குறைந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாய்லர்களின் இயக்கத்தை குறைந்தபட்சம் 40 முதல் 45 நாட்கள் வரை நிறுத்தி வைத்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்த பாகங்களை அகற்றி புதிய பாகங்கள் பொருத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் முழுமையாக நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெற்றுள்ளதா என்பது குறித்து, தொழிற்சாலை ஆய்வாளர், கொதிகலன் ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து தகுதிச் சான்றிதழ் தந்தால் தான் கொதிகலன்களை இயக்க வேண்டும் என்பது, என்.எல்.சி. நிறுவனம் தொடங்கிய நாள் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இத்தகைய பராமரிப்பு முறை கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றப்படவில்லை. 10 அல்லது 15 தினங்களுக்குள்ளாக பராமரிப்பு பணிகளை அவசர, அவசரமாக முடிக்கும் நிலை ஏற்பட்டு அதன் விளைவே தொடர் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. இதன் காரணமாக விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 01.07.2020ல் நடைபெற்ற விபத்தில் அன்றைய தினமே ஆறு தொழிலாளர்களும், அதனைத் தொடர்ந்து தற்போது வரை 13 தொழிலாளர்கள் வரை உயிர் இழந்துள்ளனர். மருத்துவமனையில் உயிருக்கு பலர் போராடிக் கொண்டு உள்ளனர். தொழிலாளர்கள் இறந்தவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் உதவித் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் என்.எல்.சி. நிர்வாகம் வழங்க வேண்டும் என்று ஒன்றுபட்டு போராடினார்கள். தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்று, இறந்தவர்களுக்கு தலா ரூ.30 லட்சம் மற்றும் ஒருவருக்கு வேலை என்று வாக்குறுதி அளித்தது. 

நிர்வாகம் அளித்திட்ட வாக்குறுதிக்கு மாறாக, பணியில் உள்ள தொழிலாளர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்து, இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் பச்சை துரோகமாகும். ஆண்டு ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டித் தரும் நிறுவனமாக உயர்த்திட்ட பெருமை தொழிலாளர்களுடைய கடும் உழைப்பு என்பதனை நிர்வாகம் மறந்துவிடலாகாது.               

ஆகப் பெரிய என்.எல்.சி. நிறுவனம் தொழிலாளர்களுக்கு அளித்திட்ட வாக்குறுதியை உண்மையாக நிறைவேற்றி தொழிலாளர்கள் நம்பகத்தன்மையை பெற்றிட முன்வர வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.3 லட்சம் நிதி அறிவித்து, மத்திய அரசும் நிதி வழங்கிட வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் இதுவரை மத்திய அரசு எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர், மூன்று லட்சம் ரூபாய் வழங்கியதுடன் தனது கடமை முடிந்து விட்டதாக கருதாது, என்.எல்.சி. நிர்வாகம் அளித்திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், மத்திய அரசிடமிருந்து நிவாரணம் பெற்றுத் தரவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" என மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPI Requests NLC


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->