ஆட்சியில் பங்கு தேடும் காங்கிரஸ் – தவெகவுடன் கூட்டணி அமைக்குமா? ரூட் எடுக்க முடியாமல் திணறும் தமிழ்நாடு காங்கிரஸ்! பின்னணி என்ன?
Congress seeking share in government will it form an alliance with Tvk Tamil Nadu Congress struggling to take root What is the background
தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் தவித்து வரும் காங்கிரஸ் கட்சி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்ற முனைப்புடன் அரசியல் நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக திமுக கூட்டணியில் தொடர்ந்தாலும், அமைச்சரவையிலும் ஆட்சி நிர்வாகத்திலும் நேரடி பங்கு கிடைக்காதது காங்கிரஸ் தலைமைக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் உள்ளுக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில்தான் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முன்வைக்கும் “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற அரசியல் முழக்கம், காங்கிரஸ் கட்சியை புதிய சிந்தனைக்குள் தள்ளியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். 2019 மக்களவை, 2021 சட்டப்பேரவை மற்றும் 2024 மக்களவை தேர்தல்கள் என தொடர்ச்சியாக திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடித்தாலும், தற்போது அந்த உறவில் மெதுவாக விரிசல் தென்படத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக தரப்பில் அதிக தொகுதிகள் ஒதுக்க மறுப்பதும், ஆட்சியில் முக்கிய பொறுப்புகளை வழங்க தயங்குவதும் காங்கிரஸின் அதிருப்திக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால், தவெகவுடன் கூட்டணி அமைத்து அதிக தொகுதிகளில் போட்டியிட்டு ஆட்சியில் பங்கேற்கலாம் என்ற அரசியல் கணக்கை காங்கிரஸ் தலைமை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்திக்கு நெருக்கமான சில தலைவர்கள், இந்த சட்டப்பேரவைத் தேர்தலை பயன்படுத்தி தமிழகத்தில் காங்கிரஸை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்து வருகின்றனர்.
அரசியல் கணக்கின்படி, திமுக கூட்டணியில் 40 தொகுதிகள் கிடைப்பதை விட, தவெகவுடன் இணைந்தால் 70 முதல் 75 தொகுதிகள் வரை பெற முடியும் என்றும், அதன் மூலம் குறைந்தது 10 சதவீத வாக்கு வங்கியை நிரூபிக்க முடியும் என்றும் காங்கிரஸ் தலைமை நம்புகிறது. இதன் தொடர்ச்சியாக 2029 மக்களவைத் தேர்தலில் தற்போது உள்ள 10 எம்.பி.க்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தலாம் என்பதே அந்தத் திட்டத்தின் நீண்டகால இலக்காக கூறப்படுகிறது.
ஆனால் இந்த அணுகுமுறைக்கு காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ப.சிதம்பரம், சு.திருநாவுக்கரசர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர், திமுக கூட்டணியில் தொடர்வதே பாதுகாப்பானதும் வெற்றிக்கு வழிவகுப்பதும் என வலியுறுத்தி வருகின்றனர். கடந்த தேர்தல் அனுபவங்கள், தனித்து போட்டியிட்டால் தமிழகத்தில் காங்கிரஸுக்கு பெரிய வெற்றி சாத்தியமில்லை என்பதை உணர்த்தியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2014 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4.3 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்ற அனுபவம் காங்கிரஸுக்கு உள்ளது. அதே சமயம் திமுகவுடன் இணைந்தபோது வாக்கு வங்கி உயர்ந்ததும் உண்மை. இருப்பினும், வெற்றி வாய்ப்பு குறைந்த தொகுதிகளை மட்டுமே தங்களுக்கு ஒதுக்கி, முக்கியமான தொகுதிகளை திமுக தக்க வைத்துக் கொள்கிறது என்ற மனக்குறை காங்கிரஸில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றாலும், வரும் தேர்தலில் அந்த எண்ணிக்கை குறையலாம் என்ற அச்சமும் அவர்களுக்கு உள்ளது.
இதற்கிடையே, திமுக தரப்பில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொகுதிகளில் போதுமான அளவு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இருந்தாலும் காங்கிரஸை முற்றிலும் கைவிட திமுக தலைமை தயாராக இல்லை என்றும், டெல்லியில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், கேரள காங்கிரஸ் தலைமையகம், தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறது. நடிகர் விஜய்க்கு கேரளத்தில் உள்ள ரசிகர் ஆதரவும், எல்லைப் பகுதிகளில் அது தேர்தல் பலன் தரும் என்ற நம்பிக்கையும் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
இந்த அரசியல் கணக்குகளுக்கிடையில், நடிகர் விஜய்யும் தனித்து அரசியல் பயணம் செய்வது கடினம் என்பதை படிப்படியாக உணர்ந்து வருகிறார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக, பாஜக கூட்டணிகள் தற்போது அவருக்கு சாத்தியமில்லாத நிலையில், திமுகவுடன் இணைவதும் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதனால், காங்கிரஸ் ஆதரவே விஜய்க்கு எஞ்சியிருக்கும் முக்கிய அரசியல் வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
ராகுல் காந்தியின் சமீபத்திய ஆதரவு கருத்துகள், காங்கிரஸ் – தவெக உறவுக்கான தொடக்கமாக அமையுமா? அல்லது விஜய் தனித்து களம் இறங்கி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பாரா? என்பதே இப்போது தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
English Summary
Congress seeking share in government will it form an alliance with Tvk Tamil Nadu Congress struggling to take root What is the background