கரூர் சம்பவம்: 'எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு மிகப் பெரிய பாடம்'; செல்வப்பெருந்தகை; காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல்..! - Seithipunal
Seithipunal


கரூரில் விஜய்யின் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

கரூரில் நடைபெற்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக  அரசியல் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் உயிரிழந்த செய்தி தமிழ்நாடு முழுவதையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இச்சம்பவம் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு மிகப் பெரிய பாடமாக இருக்கிறது.

எந்தக் கட்சி, எந்த அமைப்பு பொதுக்கூட்டம் நடத்தினாலும், மக்களின் உயிர் பாதுகாப்பு முதன்மை என்று கருதி திட்டமிடல் செய்யப்பட வேண்டும். மருத்துவ அவசர உதவி, காவல்துறை ஒழுங்கு, அவசர வெளியேறும் வழிகள், மக்கள் நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், அனைத்தும் உறுதியாக இருக்க வேண்டும்.

மாநில அரசு உடனடியாக விசாரணை செய்து, பாதுகாப்பு குறைபாடுகள் எங்கே நடந்தன என்பதைக் கண்டறிந்து இத்தகைய துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு யார் காரணமோ அவர்கள் முழு பொறுப்பேற்கவேண்டும் (Fix Accountability). தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்.

இனி இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாதவாறு கடுமையான வழிமுறைகள் வகுக்க வேண்டும்.அரசியல் கூட்டங்கள் மக்களின் உயிரைக் காவுகொள்வதற்கான மேடை அல்ல; மக்களின் உரிமைகளையும் நலன்களையும் காக்கும் மேடையாகவே இருக்க வேண்டும்.

மீண்டும் ஒருமுறை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும் இரங்கல்களையும், கவலைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:

'தமிழ்நாட்டின் கரூரில் நடந்த ஒரு அரசியல் பேரணியில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது, இது பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்துள்ளது. அவர்களின் அன்புக்குரியவர்களுக்காக என் இதயம் துடிக்கிறது, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கவும், நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளில் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றவும் காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.' என்று தெரிவித்துள்ளார்.

ப்ரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

'கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மனம் உடைந்துவிட்டது.இந்த நினைத்துப் பார்க்க முடியாத துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் அவர்கள் வலிமை பெறட்டும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

இந்தப் பகுதியில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவவும், நிவாரணப் பணிகளில் குடும்பத்தினருக்கும் அதிகாரிகளுக்கும் ஆதரவளிக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.' என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளதாவது:

'தமிழ்நாட்டின் கரூரில் நடந்த ஒரு அரசியல் பேரணியில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மற்றும் துயரமான கூட்ட நெரிசலால் ஆழ்ந்த துயரமடைந்தேன், இதில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

துயரமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கவும், நிவாரணம் மற்றும் உடனடி மருத்துவ உதவிகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.' என்று தெரிவித்துள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress leaders express condolences over Karur tragedy


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->