போர் சூழலை வைத்து நாட்டில் அச்சத்தை கிளப்புகிறது காங்கிரஸ்...! - அசாமில் பிரதமர் மோடி கடும் விமர்சனம்
Congress fueling fear country by exploiting war situation pm Modi launches scathing criticism Assam
அசாம் மாநிலம் சில்ச்சரில் நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி, ஷில்லாங்–சில்சார் இடையிலான 4 வழி அதிவேக பசுமை வழித்தட சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் உரையாற்றிய அவர், ரூ.22,860 கோடி மதிப்பில் 166 கி.மீ நீளத்தில் அமைக்கப்படும் இந்த சாலை, மேகாலயா மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை புதிய வேகத்திற்கு கொண்டு செல்லும் எனத் தெரிவித்தார்.

இதன் மூலம் கவுகாத்தி-சில்சார் இடையிலான பயண நேரம் 8.5 மணி நேரத்தில் இருந்து சுமார் 5 மணி நேரமாக குறையும் என்றும் தெரிவித்தார்.
இந்த வளர்ச்சி திட்டங்கள் பராக் பள்ளத்தாக்கை வடகிழக்கு இந்தியாவின் முக்கிய வர்த்தக மற்றும் தளவாட மையமாக மாற்றும் என்றும், இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் எல்லை வரையறைகள் காரணமாக பராக் பள்ளத்தாக்கின் கடல் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், ஒருகாலத்தில் வர்த்தக மையமாக இருந்த அந்தப் பகுதியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
அந்த நிலையை மாற்றவே 'இரட்டை என்ஜின்' அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.மேலும், வடகிழக்கு மாநிலங்களை நீண்ட காலமாக புறக்கணித்தது காங்கிரஸ் என்றும் அவர் குற்றம்சாட்டினார். “காங்கிரஸ் சிந்தனை முடியும் இடத்தில் தான் எங்கள் பணிகள் தொடங்குகின்றன” எனத் தெரிவித்த அவர், வளர்ச்சியில் பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் என விளக்கினார்.
ஒருகாலத்தில் வன்முறை பாதையில் தள்ளப்பட்ட அசாம் இளைஞர்கள் இன்று வாய்ப்புகளின் புதிய உலகை நோக்கி நகர்ந்து வருகிறார்கள் என்றும், தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வரும் காங்கிரஸ் விரைவில் தோல்விகளில் ‘சதம்’ அடிக்கும் நிலையை எட்டும் என்றும் அவர் விமர்சித்தார்.
உலகளவில் போர் சூழல் நிலவும் நிலையில் இந்திய மக்கள் குறைந்த பாதிப்புகளையே சந்திக்க அரசு முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் நாட்டில் அச்சத்தை உருவாக்க சில அரசியல் முயற்சிகள் நடக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்தியாவின் வேகமான வளர்ச்சியை சகிக்க முடியாத சில சர்வதேச சக்திகளின் தாக்கத்தில் காங்கிரஸ் செயல்படுகிறது என்றும், அது அவர்களின் கைகளில் ஒரு கைப்பாவை போல மாறி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
English Summary
Congress fueling fear country by exploiting war situation pm Modi launches scathing criticism Assam