காங்கிரஸ் முன்வைக்கும் ‘கூட்டாட்சி’ கோரிக்கை!"கை" காட்டும் காங்கிரஸ்.. உற்று கவனிக்கும் விஜய்! திமுக கூட்டணியில் திடீர் தயக்கம் ஏன்!
Congress demand for federal government Congress shows its hand Vijay is watching closely Why the sudden hesitation in the DMK alliance
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சி திடீரென ‘கூட்டாட்சி’ அல்லது ‘அதிகாரப் பகிர்வு’ என்ற கோரிக்கையை முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், காங்கிரஸ் ஏன் இந்த விவகாரத்தை முன்வைக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில், இந்த முறை அதிகபட்ச தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. 2001 தேர்தலைத் தவிர்த்தால், இது காங்கிரஸ் போட்டியிட்ட குறைந்தபட்ச எண்ணிக்கையாகும். 2001ஆம் ஆண்டு மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் வலுவாக இருந்ததால், காங்கிரஸுக்கு அப்போது 14 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. அந்த வரலாற்றுப் பின்னணியை கருத்தில் கொண்டு, இந்த முறை குறைந்தது 40 தொகுதிகள் வரை கேட்டுப் பெற வேண்டும் என்பதே காங்கிரஸின் இலக்கு என கூறப்படுகிறது.
ஆனால், திமுக தரப்பு அதிகபட்சமாக 32 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, 38 தொகுதிகள் என்றாலும் சம்மதிக்கலாம் என காங்கிரஸ் தரப்பு தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த இடைவெளியே தற்போது அரசியல் அழுத்தமாக மாறியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே, ஆட்சியில் அதிகாரப் பகிர்வு என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதற்கான வெளிப்பாடாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியிலும் பங்கு வேண்டும் எனக் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்த வரலாறு இல்லை. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளுமே தனித்தலைமை ஆட்சியையே விரும்பி வந்துள்ளன. அதனால், அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுகள் இதுவரை பெரிதாக எழவில்லை.
ஆனால் இந்த தேர்தலில் புதிய திருப்பமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசியல் களத்தில் நுழைந்துள்ளது. தனது கட்சியின் முதல் மாநாட்டிலேயே, தவெக வெற்றி பெற்றால் கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு அப்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தேர்தல் நெருங்கும் நிலையில் அது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தப் பின்னணியில், காங்கிரஸ் தவெக பக்கம் செல்லலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன. தவெக தரப்பும், காங்கிரஸை தங்களின் “இயற்கையான கூட்டணி கட்சி” எனக் கூறியுள்ளது. விஜய் – ராகுல் காந்தி நட்பு, இந்தக் கூட்டணிக்கு சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது. இதற்காக ராகுல் காந்தியை சம்மதிக்க வைக்கும் முயற்சிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள்ளேயே நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து தவெக முக்கிய நிர்வாகி நிர்மல் குமார் கூறுகையில், “கூட்டணி தொடர்பான முடிவுகள் அனைத்தும் கட்சித் தலைவர் விஜய்யின் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகே எடுக்கப்படும். சரியான நேரத்தில் சரியான அறிவிப்பு வரும்” என தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், காங்கிரஸ் முன்வைக்கும் கூட்டாட்சி – அதிகாரப் பகிர்வு கோரிக்கை என்பது வெறும் கொள்கை விவாதம் அல்ல; அது தொகுதி பங்கீடு மற்றும் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும் ஒரு தேர்தல் வியூகமாக பார்க்கப்படுகிறது. இந்த வியூகம் திமுகவை எவ்வாறு பாதிக்கும், காங்கிரஸ் – தவெக கூட்டணி சாத்தியமாகுமா என்பதெல்லாம், வரும் வாரங்களில் தமிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்பங்களை உருவாக்கலாம்.
English Summary
Congress demand for federal government Congress shows its hand Vijay is watching closely Why the sudden hesitation in the DMK alliance