'காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இரண்டு கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன'; கார்த்தி சிதம்பரம் பேட்டி..!
Congress and DMK both parties are working with the intention of continuing the alliance Karthi Chidambaram said in an interview
'அ.தி.மு.க., முன்பு இருந்த நிலையில் இப்போது இல்லை. ஒரு பெரிய கட்சி, நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். அக்கட்சியின் அடையாள சின்னம் எல்லா இடத்திலும் சென்று அடைந்துள்ளது. அ.தி.மு.க.,வை நான் குறைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அவர்களிடம், முன்பு இருந்த ஆளுமை இல்லை' என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று மாலை தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அவர்களை நாடித்தான் எல்லா அரசியல் கட்சிகளும் வந்து சந்தித்து கூட்டணி அமைத்தனர் என்றும், அ.தி.மு.க.,வின் தலைமையின் கீழ்தான் தேர்தலைச் சந்தித்தார்கள். ஆனால், இன்று அவர்கள் ஒரு முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது, கட்சிக்குள்ளேயே பஞ்சாயத்து என்றால் கூடவும், முடிவெடுக்க வேண்டும் என்றால் கூட டில்லிக்கு செல்ல வேண்டியிருக்கிறது எனவும், பா.ஜ.க.வை நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க., இருக்கிறது. இதனை தமிழ்நாடு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர் என்று கார்த்திக் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எல்லா கட்சியும் தங்களை பெருமையாகவும், துாக்கி உயர்த்தி பேசுவது தமிழ்நாடு அரசியலில் வாடிக்கை தான் என்றும், ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், த.வெ.க.,வில் சேர்ந்த நிலையில், அந்த கட்சியோட பெருமைகளை அவர் பேச வேண்டிய நிலையில் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், த.வெ.க., முழுமையான அரசியல் கட்சியாக மாறியதா என்றால், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று குறிப்பிட்டதோடு, அது ஒரு ரசிகர் மன்றம் போலதான் நடக்கிறது. த.வெ.க.,வில் உத்தரவு போட்டு, கட்டுபடுத்தும் வடிவம் கிடையாது. ஒரு மாவட்டத் தலைவரோ, செயலாளரோ அவர் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய அமைப்பு இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அத்துடன், விஜய் ஒரு பெரிய நடிகர், அவருக்குப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டுகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான் என்று தெரிவித்துள்ளதோடு, அரசியல் கட்சி துவங்கி கோட்டையில் கொடி ஏற்றுவது என்பது நீண்ட பயணம் என்று கூறியதோடு, இதற்கு பல்வேறு காரணிகளை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

மேலும், ஓ.பி.எஸ். தி.மு.க.,வில் இணைந்தது முதலமைச்சர் ஸ்டாலினின் சாதுர்யமாகத்தான் நான் பார்க்கிறதாகவும், ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது தேர்தலைச் சந்திக்க, ஒரு பெரிய கூட்டணியை அமைப்பதுதான் வெற்றிகரமான அரசியலாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிலும் ஆளும் கட்சியாக இருக்கும் போது ஏற்படும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள ஒரு பெரிய கூட்டணி தேவையாக இருக்கும் என்றும், அதை மு.க.ஸ்டாலின் ரொம்ப சாதுர்யமாகவும், தன்னை விமர்சனம் செய்தவர்களைக் கூட பெரிய மனது செய்து, அரவணைத்து ஒரு பெரிய கூட்டணியை அமைத்துள்ளது அவருக்குக் கிடைத்த வெற்றி என்று பேசியுள்ளார்.
,மேலும், எல்லா கட்சிக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். 234 தொகுதி தான் உள்ளது. நிறைய கட்சிகள் கூட்டணியில் உள்ளார்கள். எனவே கிவ் அண்ட் டேக் பாலிசியில் ஒரு புரிதல் வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்கா இன்னொரு நாடு மீது போர் தொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏகாதிபத்திய மனப்பான்மையை வன்மையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளதோடு, ஈரான் மக்களுக்காக எனது அனுதாபம் இருக்கிறது. அவர்கள் இந்த போரில் மட்டும் அல்ல, உள்நாட்டிலேயே அங்குள்ள மக்கள் நசுக்கப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது அந்நாட்டில், விலைவாசிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 7,000 பேர் இறந்துள்ளனர். அது அந்த நாட்டின் அரசாங்கம் செய்த கொடூரம் என்று கூறியதோடு, தான் என்றைக்கும் தலிபானுக்கோ, அயதுல்லாவுக்கோ வக்காலத்து வாங்க மாட்டேன் என தான் சொன்னேன். ஆனால் அமெரிக்கா நடத்தும் போரை நியாயப்படுத்தவில்லை எனவும், ஈரான் அரசின் கொடுமையை படிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
அத்துடன், வரும் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் இடத்தில் தி.மு.க., உள்ளது எனவும், ஒவ்வொரு கட்சியுடன் பேசி அவர்கள் தீர்மானிப்பார்கள். காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இரண்டு கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார்.
மேலும், சசிகலா பற்றி பேசினால் பெரிய தாக்கம் இருக்காது என்றும், அவர்களின் நேரம் எல்லாம் முடிந்து விட்டது. அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கு த.வெ.க-வுக்கும் சென்று விட்டார்கள். த.வெ.க., கூட்டத்திற்கு அனைவரும் பத்திரமாக வந்து விட்டு செல்ல வேண்டும். மின்கம்பத்தில் ஏறாதீர்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Congress and DMK both parties are working with the intention of continuing the alliance Karthi Chidambaram said in an interview